9 ஆண்டுக்கு பிறகு இலங்கை சம்பூர் கிராமத்தில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி தொடங்கியது: அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்பு

By டி.ராமகிருஷ்ணன்

இலங்கையில் போரின்போது இடம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணியை, அதிபர் மைத்திரிபால சிறிசேனா தொடங்கிவைத்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரின்போது, தமிழர்கள் பலர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். ஏராளமான தமிழர்கள் இலங்கையிலேயே இடம்பெயர்ந்தனர். பலர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கின.

இந்நிலையில், தலைநகர் கொழும்பில் இருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள சம்பூர் கிராமத்தில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை போரின்போது, சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பலர் இடம்பெயர்ந்தனர். அவர்களில் 30 வயது நிரம்பிய பொன்கலா மற்றும் விஜயலதா ஆகிய 2 பெண்களும் அடங்குவர். கடந்த மாதம்தான் சொந்த கிராமத்துக்கு இவர்கள் திரும்பினர். இப்போது மறுகுடியமர்த்தப்பட்டதால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

போரின்போது சம்பூர் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த 25 குடும்பத்தினருக்கு அவர்களுடைய சொந்த நிலத்துக்கான ஆவணங்களை அதிபர் சிறிசேனா வழங்கி மறுகுடியமர்த்தும் பணியை தொடங்கிவைத்தார். மறுகுடியமர்த்தும் பணி தொடங்கியதன் ஆதாரமாக இந்நிகழ்ச்சியில் பொன்கலாவும் விஜயலதாவும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா பேசியபோது, ‘‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு எல்லா வசதிகளையும் எனது தலைமையிலான அரசு மனதார செய்து தர நடவடிக்கை எடுக்கும். நாட்டில் மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் எல்லா வசதிகளும் இந்த பகுதி மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிபர் மேலும் கூறும்போது, ‘‘தமிழர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு சென்று பார்த்தேன். அங்கிருந்த நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. போரால் ஏற்படும் பாதிப்புகளை மற்றவர்களை விட தமிழர்கள் நன்று அறிவார்கள். இனிமேல் இந்த நாட்டில் இதுபோல் ஒரு போர் ஏற்பட கூடாது’’ என்றார்.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘இடம்பெயர்ந்த 825 குடும்பங்களில் இதுவரை 205 குடும்பத்தினர் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். மற்றவர்களுக்குரிய நிலத்தில் தற்போது கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் புதிய இடத்துக்கு முகாமை மாற்ற சில மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். கடற்படையினர் இடத்தை காலி செய்ததும், சம்பந்தப்பட்ட தமிழர்களிடம் அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டுவிடும்’’ என்றனர்.

சொந்த கிராமத்துக்கு திரும்பிய பொன்கலா கூறியபோது, ‘‘இப்போது கிராமத்தில் குடிநீர் தொட்டிகள் ஏராள மாக வைத்துள்ளனர். தினமும் அவற்றில் தண்ணீர் நிரப்பிவிட்டு செல்கின்றனர். ஆனால், கிராமத்தில் மின்சார விநியோகம்தான் இல்லை’’ என்றார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘கிராமத்துக்கு மின் விநியோகம் செய்வதற்கான முக்கிய வழித்தடங்களை சிலோன் மின்சார வாரியம் அமைத்துவிட்டது. ஆனால் மின் விநியோகத்துக்கான லைன்கள் இன்னும் நிறுவப்படவில்லை. ஒரு மாதத்துக்குள் அந்தப் பணிகள் முடிந்து கிராமத்துக்கு மின் விநியோகம் வழங்கப்படும்’’ என்றனர்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியபோது, ‘‘இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை. ஒருங்கிணைந்த இலங்கையின் குடிமக்களாக வாழவே விரும்புகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 min ago

உலகம்

1 hour ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்