30 ஆண்டுகளுக்கு முன்னர், நான் இருபதுகளில் இருந்தபோது நானும் இரண்டு நண்பர்களும் புஸியா நகரிலிருந்து கிளம்பி, இரவில் காரில் பயணித்துக்கொண்டிருந்தோம். அப்போது காரின் பின்பக்கத்தின் இடது புற டயர் பஞ்சராகிவிட்டது. துரதிருஷ்டவசமாக, ஸ்டெப்னி டயரும் ஏற்கெனவே பஞ்சராகியிருந்ததால், அதை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, பஞ்சரான டயரில் மண்ணையும், புற்களையும் நிரப்பி அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்குக் காரை ஓட்டிச் செல்வது என்று நானும் பென் கவ்யு, டொமினிக் ம்வாஸ்மிஸி எனும் எனது இரண்டு நண்பர்களும் முடிவெடுத்தோம். எதிர்பார்த்தது போலவே, அந்தத் தற்காலிக ஏற்பாடு ஒருவாறு கைகொடுத்தது.
புதிய சவால்
கரோனா வைரஸ், இந்த உலகைப் பஞ்சராக்கி, சாலையின் ஓரத்தில் நம்மைத் தவிக்கவைத்துவிட்டது. ஸ்டெப்னி டயர்கள் நம்மிடம் இல்லாமல், அடுத்து என்ன செய்வது என்று திகைத்துப் போயிருக்கிறோம். தங்களுக்கு முழுச் சம்பளம் கிடைக்குமா, சம்பளமே கிடைக்குமோ கிடைக்காதோ என்று மில்லியன் கணக்கானோர் யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். உணவுக்கும், வீட்டு வாடகைக்கும் போதுமான பணம் கிடைக்குமா என்றும் பலர் காத்திருக்கிறார்கள்.
கரோனா வைரஸின் நேரடிப் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும் துயரங்களையும் தாண்டி, கென்ய தேசிய புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. 4 மில்லியன் கென்ய இளைஞர்கள் வேலையற்றவர்கள் என்பதுதான் அந்த அறிக்கை சொல்லும் தகவல். இந்தத் தொற்றுநோய் காரணமாக, அடுத்த அறிக்கையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
நம்பிக்கையூட்டும் செய்தி
இத்தனை கெட்ட செய்திகளுக்கும் மத்தியில், நாம் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம் என்றே நான் சொல்வேன். ஏனெனில் நம்பிக்கையின் வெளிச்சம் ஏற்கெனவே நம் மீது விழுந்திருக்கிறது. கரோனா வைரஸ் தொற்றிலிருந்து ப்ரெண்டா செரோடிச், ப்ரையன் ஓரிண்டா ஆகிய இரண்டு இளைஞர்கள் மீண்டிருப்பது இருளை அகற்றி நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு தந்த உடல் ரீதியான அழுத்தத்தையும், அதன் காரணமாக உருவான உணர்ச்சிக் கொந்தளிப்பையும் இந்த இரண்டு இளைஞர்களும் கடந்து வந்துவிட்டார்கள். கிலிஃபி கவுன்டியின் துணை ஆளுநரும் இதுபோல் மீண்டு வந்துவிட்டார். ஆபத்தான அந்த வைரஸிலின் பிடியிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.
இயற்கையைப் பின்பற்றுவோம்
இந்த அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தை நமக்கு உணர்த்துகிறது. பொறுப்புள்ள கென்ய குடிமக்களாக, நாம் அந்த வைரஸை மற்றவர்களுக்குப் பரப்பாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அந்தப் பாடம். தொற்றுக்குள்ளானாலும் எந்த விதமான அறிகுறியும் வெளிப்படாதவர்கள்கூட கரோனா வைரஸைப் பரப்ப முடியும்.
எனவே, ஒரு புதிய வழிமுறையைப் பின்பற்றுவதற்கான பொறுப்புணர்வு நமக்கு இருக்கிறது. வீட்டிலேயே இருப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது, அவசியமான எல்லா மாற்றங்களையும் கைக்கொள்வது, இயற்கையின் வழியில் சிந்தித்து அதற்கேற்ப நடப்பது ஆகியவை அடங்கிய வழிமுறை அது.
இயற்கையின் வழி நடப்பது என்றால், இயற்கையின் வழித்தடங்களைப் பின்பற்றுவது, இயற்கையைப் போலவே நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது. எப்படி ஒரு மரம், முதிர்ந்த தனது இலைகளை உதிர்த்துவிட்டு, புதிய இலைகள் துளிர்க்க வழிவகுக்கிறதோ, அப்படி நாமும் நோயைப் பரப்ப வழிவகுக்கக்கூடிய சில பழைய பழக்கவழக்கங்களை உதிர்த்துவிட வேண்டும். இந்த வழிமுறையை நாட்டின் அனைத்து இளைஞர்களும் சமூகவலைதளத்தில் பரப்ப வேண்டும். தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் அதை அமல்படுத்த வேண்டும்.
போற்றத்தக்க வீரர்கள்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நமது நாடு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இதுவரை நாம் கண்டிராத இந்தப் புதிய போரில் முன்னணியில் நின்று செயலாற்றும் அனைத்து கென்யர்களின் பணிகளையும் நாம் கொண்டாட வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில், அதிகம் பேசப்படாதவர்கள், ‘நேஷனல் மல்டி ஏஜென்ஸி கமாண்ட் சென்டர் ஃபார் கோவிட் -19’ எனும் அமைப்பின் உறுப்பினர்கள்தான். அரசின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது. தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, உடனடியாகத் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு, இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இடையறாத ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.
அவர்களது துரிதமான நடவடிக்கைகளால்தான், கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உடனுக்குடன் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அப்படி இல்லையென்றால், ஆயிரக்கணக்கானோர் புதிய தொற்றுக்குள்ளாகியிருப்பார்கள்.
ஆக்கபூர்வ முன்னெடுப்புகள்
சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் முடாஹி காக்வே, சமீபத்தில் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) உற்பத்தி செய்வதில் கென்யா மும்முரமாக இறங்கியிருக்கிறது. இது உள்ளூர் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்பதுடன், நமது சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும் அதிகரிக்கும். ‘நேஷனல் மல்டி ஏஜென்ஸி கமாண்ட் சென்டர் ஃபார் கோவிட் -19’ அமைப்பு, கென்ய உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், நாட்டின் மூலை முடுக்கிலும், தேவைப்படும் நபர்களுக்கு இந்த உபகரணங்கள் சென்றடையும்.
இந்த முன்னெடுப்புக்குப் பலம் சேர்க்க, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான விண்ணப்பங்கள் இலவசம் என்று அறிவித்திருக்கிறது கென்ய தரக் கட்டுப்பாடு நிறுவனம் (Kenya Bureau of Standards - KEBS). அத்துடன், முகக்கவசத்துக்கான மாதிரி வடிவங்களையும், தர நிர்ணயத்தையும் இணையம் மூலம் இலவசமாகப் பதிவிறக்கலாம் என்றும் அறிவித்திருக்கிறது.
அடிமட்ட அளவில், ‘போடா போடா’ (Boda boda – கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இயக்கப்படும் இருசக்கர வாகன டாக்ஸிக்கள்) ஓட்டுநர்கள், தேவைப்படும் நபர்களுக்கு உணவுகளை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தத் தொற்றுநோய் தொடர்ந்து நீடித்தால், இந்த உணவு விநியோகப் பணி மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்.
கரோனா வைரஸ் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருந்தாலும், கூட்டுப் பணியின் மூலம் இந்த இருளைக் கடந்துவர முடியும் என்பது உறுதியாகிறது.
30 ஆண்டுகளுக்கு முந்தைய இரவில், நான் செய்ததுபோல் சற்றே அசவுகரியமான, தற்காலிக நடவடிக்கையைப் பின்பற்றி வண்டியை ஓட்ட வேண்டும். அது – நாம் வீட்டிலேயே இருப்பதுதான்!
- ஐஸக் கலுவா ( சுற்றுச்சூழல் ஆர்வலர், ‘க்ரீன் ஆப்பிரிக்கா ஃபவுண்டேஷன்’ நிறுவனர்)
நன்றி: ‘தி ஸ்டாண்டர்டு’ (கென்ய நாளிதழ்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago