வல்லரசு நாடுகளே கரோனா வைரஸ் பரவலால் கலங்கி நிற்கும்போது, ஏழ்மை, வன்முறை, சுகாதார வசதியின்மை ஆகியவற்றுக்குப் பேர்போன ஆப்பிரிக்க நாடுகள் இதை எப்படி எதிர்கொள்கின்றன என்பது இன்றைக்கு முக்கியமான கேள்வி.
எச்.ஐ.வி தொடங்கி எபோலா வரை ஏகப்பட்ட பாதிப்புகளைச் சந்தித்துவரும் ஆப்பிரிக்கா, கரோனாவின் கொடுங்கரங்களிலிருந்து விலகியிருக்கிறதா? உண்மையில் ஆப்பிரிக்க நாடுகளின் நிலை என்ன?
சி.என்.என், ஏ.எஃப்.பி உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் இதே கேள்விகளைத்தான் சில நாட்களுக்கு முன்னர் எழுப்பியிருந்தன. அதற்குச் சரியான விடை, ஆப்பிரிக்க நாடுகள்தான் கரோனாவின் கடைசி இலக்கு என்பதுதான். புவியியல் அடிப்படையில் பிற நாடுகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டம், சர்வதேசப் பயணங்களின் விருப்பப் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது. அதனால்தான், வெளிநாடுகளிலிருந்து அங்கு செல்வோரால் கரோனா வைரஸ் பாதிப்பு அத்தனை வேகமாகப் பரவவில்லை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனாலும், ஆபத்தின் தொடக்கப்புள்ளி அங்கு வைக்கப்பட்டுவிட்டது என்பதே நிதர்சனம்.
முதல் நோயாளி
பிப்ரவரி 14-ல், ஆப்பிரிக்காவின் வடகிழக்கின் மூலையில் அமைந்திருக்கும் நாடான எகிப்தில் முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. எகிப்துக்கு வந்திருந்த ஜெர்மனிக்காரர் ஒருவர்தான் எகிப்தில் முதல் பலியானார். மார்ச் 12-ம் தேதி வாக்கில் எகிப்தில் 59 பேருக்குக் கரோனா தொற்று இருந்தது. அன்றைய தேதிக்கு, ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒப்பிட சரிபாதி எண்ணிக்கை அது. அந்த அளவுக்குக் கரோனா பரவல் ஆப்பிரிக்கக் கண்டத்தில் குறைவாகவே இருந்தது. மார்ச் 19-ம் தேதிவாக்கில், 600 சொச்சம் பேருக்குக் கரோனா தொற்று இருப்பதாகவும், 17 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
» கரோனா சிகிச்சை மையம்; தனது கட்டிடத்தை வழங்கிய துபாய் வாழ் இந்தியர்
» கரோனா வைரஸ்: கதறுகிறது ஸ்பெயின்- 24 மணி நேரத்தில் 812 பேர் மரணம் ; பலி எண்ணிக்கை 7,340
ஆனால், இன்றைய தேதிக்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4,200-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மார்ச் 28 வரை, போட்ஸ்வானா, புருண்டி, மலாவி உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்று ஒருவர்கூட அடையாளம் காணப்படவில்லை. அங்கெல்லாம் முழுமையான பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
கோவிட் – 19 நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநரும், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சேர்ந்தவருமான தெட்ரோஸ் அதனோம் கவலையுடன் எச்சரித்திருக்கிறார். “மிக மோசமான நிலைக்குத் தயாராக வேண்டும். இன்றே தயாராக வேண்டும் என்பதுதான் ஆப்பிரிக்காவுக்கான சிறந்த அறிவுரை” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, சப் – சஹாரன் ஆப்பிரிக்கா (sub-Saharan Africa) என்று அழைக்கப்படும் நாடுகளில் நிலைமை மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பியர்களால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கர்கள்
இதில், சற்றே வேதனை நிறைந்த வேடிக்கையான விஷயங்களும் நிகழ்ந்தேறின. கரோனா அச்சத்தால் சீனாவிலிருந்து வந்த பயணிகளைவிட, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கே பல ஆப்பிரிக்க நாடுகள் அதிக முக்கியத்துவம் தந்தன. துரதிர்ஷ்டவசமாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்துதான் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் அதிகம் பரவியது. குறிப்பாக, பின்னாளில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த இத்தாலியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளே கென்யா போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவலுக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
தாங்குமா ஆப்பிரிக்கா?
மலேரியா, காலரா தொடங்கி எச்.ஐ.வி தொற்று வரை பல்வேறு பாதிப்புகள் நிலவும் ஆப்பிரிக்கக் கண்டத்தில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப் பெரிய சவால் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் அடர்த்தி நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளில் சமூக விலக்கமெல்லாம் பெரிய அளவுக்குச் சாத்தியமில்லாத விஷயங்கள்.
சுகாதாரச் சாதனங்கள் குறைவு, போதுமான நிதியின்மை, பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் குறைவு என்று பல்வேறு குறைபாடுகளும் உண்டு. மிக முக்கியமாக, பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதால், அடிக்கடி கை கழுவ போதுமான நீர் இருப்பதில்லை. தவிர, முறைசாராத் தொழில்கள் நடக்கும் பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பது, முறைப்படுத்தப்படாத முகாம்களில் நிலவும் அடிப்படை வசதியின்மை போன்ற காரணிகள் பாதிப்பை அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான முகாம்களிலும் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பது இன்னொரு பிரச்சினை. இதனால், மருத்துவப் பணியாளர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.
நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள்
இவற்றுக்கு மத்தியிலும் கரோனாவை எதிர்கொள்ள ஆப்பிரிக்க நாடுகள் முனைப்புடன் களமிறங்கியிருக்கின்றன. வருமுன் காப்பதே சிறந்தது என்று பல கட்டுப்பாடுகளை ஆப்பிரிக்க நாடுகள் விதித்திருக்கின்றன. பயணங்களுக்குத் தடை, பொது இடங்களில் கூடுதலுக்குத் தடை, பள்ளிகள் மூடல் என்று பல்வேறு நடவடிக்கைகளைப் பல நாடுகள் மேற்கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் பரிசோதனை மையங்கள் குறைவு என்பது உண்மைதான் என்றாலும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க உலக சுகாதார நிறுவனம் உதவி வருகிறது.
சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுவது, அடுத்தவர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்ப்பது, பொது இடங்களில் கூடுவதைத் தவிர்ப்பது என்பன போன்ற அறிவுரைகளை பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போல, ஆப்பிரிக்க நாடுகளிலும், தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் பல மணி நேரத்துக்கு மின்வெட்டு நிலவுவதால், இவ்விஷயத்தில் பெரும் நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் எனும் பெயரில் போலி உபகரணங்கள் விற்பனையும் சூடு பிடித்திருக்கிறது.
நம்பிக்கை இழக்கவில்லை
2014-16-ல் எபோலா காய்ச்சல் பரவியதால், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதற்குப் பின்னர், மஞ்சள் காய்ச்சல், கிவு எபோலா என்று பல சவால்களை ஆப்பிரிக்கக் கண்டம் எதிர்கொண்டது. மறக்க முடியாத இந்த மரணப் பாடங்கள் கரோனா வைரஸின் கொடூர பாதிப்பிலிருந்து ஓரளவுக்கேனும் காக்க உதவுமா என்பதே பெரும்பாலான ஆப்பிரிக்க அரசுகளின் எதிர்பார்ப்பு.
அதிர்ஷ்டவசமாக, எபோலா பாதிப்பு ஏற்பட்டபோது இருந்ததைவிட, இப்போது உலக சுகாதார நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பு, மேற்கு ஆப்பிரிக்க சுகாதார நிறுவனம், நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஆப்பிரிக்க மையம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவை அதிகம் இருப்பதால், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கலாம் என்று ஆப்பிரிக்கத் தலைவர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கெனவே ஏழ்மையில் உழலும் ஆப்பிரிக்க மக்கள் கரோனா கொடூரத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும்!
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago