இத்தாலியின் ஜெனோவாவில் சுமார் 25 தமிழர்கள் உள்ளிட்ட 150 இந்தியர்கள் இன்னும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்காமல் அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படி இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருப்பது கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
இத்தாலியின் மிலான், ஜெனோவா உள்ளிட்ட நகரங்களின் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். இதில், ஜெனோவாவில் ஒரு பெண் உள்ளிட்ட சுமார் 12 தமிழர்கள் உள்ளிட்ட150 இந்தியர்களும் சிக்கித் தவிக்கின்றனர்.
ஜெனோவாவில் சிக்கிய நால்வரில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் சதீஷ், தேனியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவி கமலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் ’இந்து தமிழ் திசை’ இணையத்துடன் தொடர்பில் உள்ளனர்.
தமிழர்களுடன் விஜயவாடாவைச் சேர்ந்த மனோஜ் உள்ளிட்ட 2 மாணவர்களும் தங்கியுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் கமலி தங்கியுள்ளார். ஜெனோவா பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயிலும் இவர்கள் பிப்ரவரி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக தமது அறைகளில் அடைபட்டுள்ளனர்.
» ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கரோனா வைரஸுக்குப் பலியானார்
» சீனாவில் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது; வூஹானுக்கு மட்டும் நோ
ஜெனோவாவில் தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களும் இத்தாலியின் மிலான் மற்றும் ரோம் நகரங்களில் உள்ள இந்தியத் தூதரங்கள் மூலம் தம் தாய்நாடு திரும்ப முயன்றுள்ளனர். எனினும், முறையான தகவல்கள் கிடைக்காத காரணங்களால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.
சிலர், எகிப்து உள்ளிட்ட வேறு பல நாடுகளின் விமான சேவை மூலம் மகாராஷ்டிராவின் மும்பையில் இறங்கி வீடு திரும்பி விட்டனர். இவர்களால் இதுபோன்ற வாய்ப்புகளையும் பயன்படுத்த முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த மாணவரான ஸ்ரீனிவாசன் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜெனோவாவில் இருந்து தொலைபேசியில் கூறியதாவது: ''மிலானில் இருந்து மார்ச் 15-ம் தேதி அன்று 215 பேருடன் கிளம்பிய இந்திய அரசின் விமானத்தில் செல்ல தூதரகத்தில் பதிவு செய்து காத்திருந்தோம்.
ஆனால், எங்களுக்கு மட்டும் மிலானின் இந்தியத் தூதரகத்தில் இருந்து தகவல் கிடைக்கவில்லை. காரணம் கேட்டமைக்கு, அது மிலான் மாணவர்களுக்கு மட்டும் எனத் தகவல் அளித்தனர்.
வேறு நாடுகள் வழியாக மார்ச் 18 அன்று, இந்தியா கிளம்ப ரோம் நகரின் விமான நிலையத்திற்கு முன் இரவே அடைந்தோம். ஆனால், அன்றைய தினம் காலையில் கரோனாவால் அந்த அலிடாலியா சேவை விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர்.
ஆனால் ஜெனோவா திரும்பிய பின், விமானம் ரத்தாகாமல் கிளம்பிச் சென்றதுடன் அந்த தொகையான 300 ஈரோவும் எங்களுக்கு கிடைக்காது எனத் தகவல் கிடைத்து அதிர்ந்தோம். இதில், கரோனா இல்லை என மருத்துவச் சான்றிதழ் அளிக்கும்படி இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது எனக் கூறினர்.
அடுத்து ரோமில் இருந்து மார்ச் 21-ல் 263 பேருடன் கிளம்பிய இந்திய அரசின் விமானத்திற்கும் முயன்றோம். இந்த விமானத்தில் செல்ல ஜெனோவா அரசு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்ட போது அப்படி ஒரு மருத்துவ சான்றிதழைத் தருவதில்லை என மறுத்து விட்டனர். எங்கள் நண்பர்களும் அதற்காக முயல்வதாகத் தெரிவித்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் அதே விமானத்தில் சான்றிதழ் இல்லாமல் இந்தியா சேர்ந்ததாகத் திரும்பிய பின் தெரிவிக்கின்றனர்.
எனவே, மீண்டும் இந்தியத் தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்து காத்திருந்த நிலையில், திருச்சி சிவா எம்.பியைத் தொடர்பு கொண்டோம். உடனடியாக இத்தாலியின் இந்தியத் தூதரகத்தில் இருந்து நவீன் எனும் அதிகாரி தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அவர், நாம் வீடு திரும்புவதை விட இத்தாலியில் பத்திரமாக இருப்பது நல்லது என்ற வகையில் அறிவுறுத்தினார். அடுத்த விமான சேவையை இந்திய அரசு இன்னும் திட்டமிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எங்கள் அறைகளிலேயே அடைந்து கிடப்பது அச்சத்தையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. இத்தாலியில் தமிழர்களுக்கு அவ்வப்போது உதவி வந்த இலங்கைத் தமிழர்களும் கரோனாவிற்கு அஞ்சி வீடுகளில் அடைபட்டு விட்டனர். இந்நாட்டு அரசிடம் முக்கிய உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.
இத்தாலியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வருவதாகத் தெரியவில்லை. மிகச் சிறிய நகரமான ஜெனோவாவில் மார்ச் 20-ல் பலியும் பாதிப்பும் 119, 1092 என்ற நிலையில் இருந்து 29-ம் தேதியில் 377, 3334 என உயர்ந்துள்ளது.
இதில், முதன்முறையாக ஒரு இந்தியர் பெயரும் அடிபடுகிறது. மிலான், ரோம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் சிக்கியுள்ள சுமார் 25 தமிழர் உள்ளிட்ட 150 இந்திய மாணவர்களை தொடர்புகொள்வதும் சிக்கலாக உள்ளது.
நிலைமை எதுவானாலும் நாங்கள் அனைவரும் இந்தியா திரும்பி விட்டால் போதும் என்ற மனநிலையில் உள்ளோம். இதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
மிலானில் பாதிப்பு அதிகம்
ஜெனோவாவை விட அருகிலுள்ள மிலானில் பாதிப்புகள் அதிகம். இந்திய உணவுப் பொருள் விற்கும் கடைகள் அனைத்தும் இத்தாலியில் மூடப்பட்டு விட்டன. இத்தாலி அரசு வெளியிடும் அறிவிப்புகளும் அந்நாட்டு மொழியில் உள்ளதால் அதைப் புரிந்துகொள்ள மற்ற நாட்டவர்களுக்குத் தாமதமாகிறது.
அதிக பாதிப்பிற்கு மட்டும் அனுமதி
கரோனா குறித்த உதவி கேட்பவர்களைத் தேடி வரும் இத்தாலி மருத்துவக் குழு மாணவர்களை வீட்டிலேயே சோதிக்கிறது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தம்முடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறது.
வீட்டிலேயே சிகிச்சை
குறைந்த பாதிப்புள்ளவர்களிடம் வீட்டிலேயே தனிமையாக இருந்து சிகிச்சை பெறும்படி அறிவுறுத்துகிறது. இதற்கு இத்தாலி மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பாளர்கள் நிரம்பி வழிவது காரணமாகக் கருதப்படுகிறது.
இரு விமானங்களில் இதுவரை மீட்பு
இத்தாலியில் இருந்து இதுவரை இரண்டு விமானங்களில் 478 இந்தியர்கள், மத்திய வெளியுறத்துறை ஏற்பாடு செய்த விமானம் மூலம் டெல்லி சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் இந்தோ- திபெத்தியன் மத்திய படையின் முகாம்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
கரோனா ஆபத்து
இந்த முயற்சி இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கப் போதாது எனக் கருதப்படுகிறது. எனினும், இத்தாலியில் சிக்கியவர்களை அழைத்து வந்தால் இந்தியாவில் கரோனா ஆபத்து கூடும் என மத்திய அரசு அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago