அதிபர் ட்ரம்ப்புக்கு ஒரு திறந்த மடல்!

By செய்திப்பிரிவு

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்

அன்புள்ள அதிபர் ட்ரம்ப்புக்கு...
நான் உங்களுடைய ஆதரவாளர்களில் ஒருவன் அல்ல. ஆனால், கரோனாவுக்கு எதிராகப் போரிட்டு உயிர்களைக் காப்பாற்றுவது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பல அமெரிக்கர்களைப் பணிக்குத் திரும்பச் செய்வது உள்ளிட்ட பணிகளில் நீங்கள் வெற்றி பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஏனெனில், நீங்கள் - நீங்கள் மட்டுமே – எடுக்கும் முடிவுகளால்தான் பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எனவே, ஆக்கபூர்வமான நோக்கத்துடன் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதைத்தான்: உங்களுக்கு ஒரு திட்டம் தேவை.

மூன்று கட்டங்கள் கொண்ட, ‘ட்ரம்ப் திட்ட’மாக உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் அத்திட்டத்தின் வரையறைகள் குறித்து, பொதுச் சுகாதாரத் துறையின் முன்னணி நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.

தினமும் வெள்ளை மாளிகை முன்பு, சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிராமல், வியூக ரீதியிலான அவர்களது அணுகுமுறையை உங்களுடையதாகவே கருதி தழுவிக்கொண்டு, ‘துரித கதியில் நடக்க வேண்டும்’ என்று மக்கள் ஏங்கி நிற்கும் விஷயங்களைச் செய்யலாம். எல்லோரையும் காப்பாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நம்மிடம் ஒரு திட்டம் இருக்கிறது எனும் நம்பிக்கையை உருவாக்கலாம்.

விளக்கமாகச் சொல்கிறேன்.

வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அனைவரின் மனதிலும் அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவைதான்: நான் பாதுகாப்பாகஇருக்கிறேனா? என் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? எனக்கு மீண்டும் சம்பளம் கிடைக்குமா? சேமிப்பு என்று ஒன்று என்னிடமிருந்தால் அது நீடிக்குமா? என் குழந்தைகள் எப்போது பள்ளிக்குச் செல்வார்கள்? நான் உண்மையில் எப்போதுதான் வேலைக்குத் திரும்ப முடியும்? நான் பணிபுரியும் அலுவலகம் நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமா?

கடைக்காரர்கள், சிறு தொழில் மேலாளர்கள், பன்னாட்டு சிஇஓ-க்கள், வங்கியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் என்று ஒவ்வொருவரின் மனதிலும் அரித்துக்கொண்டிருக்கும் கேள்விகள் இவைதான்: எப்போது நான் தொழிலை மீட்டெடுத்து, தொடர்ந்து நடத்துவது? எங்கு, எப்போது எனது ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவது அல்லது மூலதனப் பற்றாக்குறையைச் சரிசெய்வது? பணியில் யாரைத் தக்கவைத்துக்கொள்வது, யாரைப் பணிநீக்கம் செய்வது?

இந்த நெருக்கடிக்கு முடிவு கட்டுவதும், தடுப்பூசியை உருவாக்குவதும்தான் அவர்களின் பதற்றத்தை முழுமையாக நீக்கும். ஆனால், மெயின் ஸ்ட்ரீட் முதல் வால்ஸ்ட்ரீட் வரை உள்ள ஒவ்வொருவரும் எப்போதும் ஊக்கம் பெறுவார்கள் தெரியுமா? கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட, பல கட்டத் திட்டம் உங்களிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போதுதான்!

உங்களிடம் ஒரு திட்டம் இருக்கிறதா, அதன்படி நீங்கள் செயல்படுகிறீர்களா என்று தெரிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.

ஒரு திட்டத்தை உருவாக்குவது தொடர்பான விவாதத்தைத் தூண்டும் வகையில், நானும், பொதுச் சுகாதார நிபுணரான டாக்டர் டேவிட் கட்ஸ் போன்றோரும் கடந்த வாரம் சில விஷயங்களை முன்வைத்தோம். அதில் நமது தேசத்தின் இரண்டு முக்கியத் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று பேசினோம்.

அவை:

கரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, அத்துடன் தெளிவான தரவுகள் மற்றும் நிபுணர்களின் அறிவுரைகளின்படி, ஊழியர்களை மீண்டும் அவர்களின் அலுவலகத்தில் பணியாற்றச் செய்வதற்கான வழிமுறைகளைத் துரிதப்படுத்துவது.

‘தீங்கை மொத்தமாகக் குறைத்தல்’ என்று டாக்டர் காட்ஸ் குறிப்பிடும் திட்டம் இதுதான். ஏனெனில், வைரஸால் மக்கள் மரணமடைவார்கள் என்பதுடன், நிரந்தரமான ஊரடங்கின்போது உருவாகும் பொருளாதாரச் சூழலால், தங்கள் வேலை, சேமிப்பு, எதிர்காலம் எல்லாம் நசுக்கப்பட்டுவிடும் என்ற மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றின் காரணமாகவும் மக்கள் மரணமடையக்கூடும்.

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் டாம் ஃப்ரீடன், சமீபத்தில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் எழுதியிருந்ததைப் போல, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் எதைத் தெரிவு செய்வது என்றில்லாமல், உயிர்களைக் காக்க பொதுச் சுகாதாரக் கடமையை மேம்படுத்துவதும், கூடவே பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைப்பதுமான நடவடிக்கைகள்தான் இப்போது அவசியம்.

“ஒரு பிரச்சினையைச் சரி செய்யும் நடவடிக்கைகள், அந்தப் பிரச்சினையைவிட மோசமானதாக அமைந்துவிட நாம் அனுமதிக்க முடியாது” என்று ட்வீட் செய்தபடி, கடந்த ஞாயிறு இரவில் நீங்கள் அவசரகதியில் முரட்டுத்தனமாக இந்த விவாதத்தில் குதித்திருக்கிறீர்கள். அது மொத்த விவாதத்தையும் பிளவுபடுத்திவிட்டதுடன், பகடிக்கு இடமளிக்கும் விஷயமாகவும் அமைந்துவிட்டது. நீங்கள் பங்குச் சந்தையைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறீர்கள், மனித உயிர்களைப் பற்றி அல்ல என்று உங்கள் விமர்சகர்கள் உங்களைக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அதை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளை எல்லா மாநிலங்களும், மத்திய அரசும் உடனடியாக எடுக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி, பொதுவெளியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று கட்ட திட்டத்தைப் பற்றி நீங்கள் பேசியாக வேண்டும்.

கட்டம் 1:
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சமூக விலக்கல் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய முடக்கம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதைப் பற்றி நிபுணர்கள் வெவ்வேறு விதமாகப் பேசி வந்தாலும், நமது மருத்துவமனைகள் நிரம்பி வழிவதைத் தடுக்க, தேவையான தரவுகளைத் திரட்டுவதற்கான அவகாசத்தை உருவாக்கிக்கொள்ள, வைரஸ் பரவலைத் தாமதப்படுத்துவது அவசியம் என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

பொதுச் சுகாதார நிபுணர் எஸ்கெய்ல் இமானுவேல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் குறிப்பிட்டிருப்பதைப் போல, நாடு முழுவதும் எல்லா பள்ளிகளையும், அத்தியாவசியம் அல்லாத தொழில்களையும் உடனடியாக மூட வேண்டும். நாடு முழுமைக்கும் ஊரடங்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ் பகுதிகளில் பெரும்பாலானவை மூடப்பட்டிருக்கும் போது, ஃப்ளோரிடா, நெப்ராஸ்காவின் பெரும்பாலான இடங்கள் திறந்திருக்க நாம் அனுமதிக்க முடியாது. ஏனெனில், நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்படாத பலரும் இந்த இடங்களுக்கு இடையில் பயணித்துக் கொண்டிருப்பார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். வைரஸ் பரவலை எந்த அளவுக்குத் தாமதப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு, சிகிச்சைக்கான உபகரணங்களை மருத்துவமனையில் தருவித்துக்கொள்ள முடியும்.

இன்ஜினீயரும் தொழிலதிபருமான தாமஸ் பியூயோ வெளியிட்டிருக்கும் ‘கரோனா வைரஸ்: தி ஹேம்மர் அண்ட் தி டான்ஸ்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் வரைபடங்களை இதுவரை பார்க்கவில்லை என்றால், கொஞ்சம் பார்த்துவிடுங்கள்.

“உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், லட்சக்கணக்கானோருக்கு வைரஸ் தொற்று ஏற்படும். பலர் உயிரிழப்பார்கள். சுகாதார அமைப்பே குலைந்துபோய்விடும் என்பதால், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மரணமடைய நேரும். கரோனா பரவலைத் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும், அதை எதிர்கொள்ள நம்மை நன்றாகத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியும்” என்று தாமஸ் பியூயோ கூறியிருக்கிறார்.

சில மாநிலங்களின் ஆளுநர்களும், சில கிராமப்புற மேயர்களும், தங்கள் பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைவு என்பதால், கரோனா வைரஸ் அதிகம் இல்லை என்று சொல்லி, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக் கொண்டிருப்பதை உணர்கிறேன். அவர்கள் உங்களுக்கும் சரி, அவரவர் குடிமக்களுக்கும் சரி – நன்மையைச் செய்யவில்லை.

மினெசொட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான மையத்தின் இயக்குநர் மைக்கேல் டி.ஆஸ்டெர்ஹாம், “இந்த வைரஸ் எல்லோரையும் தாக்கும். நாம் அனைவரும் இப்போது செயல்படவில்லை என்றால், மிகப் பெரிய நெருப்பாக அது வளர்ந்துவிட்டிருக்கும்” என்று என்னிடம் சொன்னார்.

கட்டம் 2:
இன்றைக்கு, இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள் பலர், எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கரோனா வைரஸுக்குப் பலியாவதைப் பார்த்து வருகிறோம். எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான தெளிவான பார்வை நம்மிடம் இல்லையென்றால், நமக்குக் கிடைக்கும் வாய்மொழிச் சான்றுகள், ஆபத்தான வகையில் நம்மைத் திசைதிருப்பிவிடும். 25 வயதுக்குட்பட்ட 500 ‘கோவிட் -19’ நோயாளிகளில், 50 பேர் இறந்துவிட்டதாக ஒரு நகரம் அல்லது மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

பரிசோதனை, தரவு சேகரிப்பு ஆகியவற்றின் மூலம், அந்தப் பிராந்தியத்தில் 25 வயதுக்குட்ப்பட்ட நோயாளிகளின் அசல் எண்ணிக்கை 25,000 என்று தெரியவரும்போது – நிலைமையே வேறு விதமாக இருக்கும்.

கட்டம் 3:
இந்தத் தரவுதான், முதன்மையான ஆதாரங்களின் மையமாக இருக்கும் என்று கூறியிருக்கும் டாக்டர் காட்ஸ், “தேசிய அளவில் கரோனா வைரஸ் பரவலைத் தாமதப்படுத்திவிட்டால், தேசிய அளவில் அடுக்கடுக்கான திட்டத்தை வகுத்துவிட்டால், இந்தத் தரவுகளின் அடிப்படையில், மக்களை மீண்டும் பணிக்கு அனுப்பி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம்” என்று குறிப்பிடுகிறார்.

“ஊரடங்கு நடவடிக்கைகள், வைரஸ் பரவலின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவில்லை என்று தரவுகள் காட்டினாலும், நாம் தொடர்ந்து அதை முன்னெடுத்தாக வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் ஆஸ்டெர்ஹாம்.

“வீடுகளிலிருந்து குப்பைகளை யாரேனும் சேகரிக்கலாம். உணவுகளையும் மருந்துகளையும் விநியோகிக்க, அடிப்படை சேவைகள் தொடர்ந்து நடக்க யாரேனும் செயல்பட்டாக வேண்டும். தரவுகள் என்ன சொன்னாலும் சரி, இதற்கென ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, ஒரு வகையில் நாம் இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் பொருளாதாரமே இருக்காது” என்கிறார் ஆஸ்டெர்ஹாம்.

அதேசமயம், “வைரஸ் பரவல் குறைந்து வருவதாகத் தரவுகள் காட்டினால், யாருக்கெல்லாம் வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கிறது, இரண்டு வாரங்களுக்குப் பிறகும் அறிகுறிகள் வெளிப்படாத நிலையில் இருப்பவர்கள் யார், அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பன போன்ற தரவுகளைத் துல்லியமாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். வைரஸுக்கு எதிராக உழைத்துக்கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், கரோனா தொற்றால் உயிரிழக்கும் அபாயம் கொண்ட முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோர் மீது அதிக கவனம் செலுத்துவதற்கான ஆற்றலை அது நமக்குத் தரும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

எனவே அதிபர் அவர்களே, தொற்று நோயியல் தரவுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கச் செய்வதன் மூலம், உங்கள் அறிவிப்புகள் அறிவியல் அடிப்படையிலானவை என்றும், ஒரு திட்டத்தின் அடிப்படையிலான வியூக ரீதியான தர்க்கத்தைக் கொண்டவை என்றும் மக்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.

மேலும், உங்கள் ஆதரவாளர்களை மட்டுமல்லாது, மொத்த தேசத்தையும் உங்கள் பக்கம் கொண்டுவர முடியும்.
ஒரு அதிபராக உங்கள் செயல்பாடும், நமது எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. உங்கள் முதல் மூன்று வருடங்களில், மக்களைப் பிளவுபடுத்துவது, திசை திருப்புவது என்று நீங்கள் செய்துவந்த விஷயங்களைத் தாண்டி நீங்கள் எழுச்சி பெற வேண்டியிருக்கிறது. அத்துடன் நாடு ஏங்கிக் காத்திருக்கும் ஒரு விஷயத்தை நாட்டுக்கு நீங்கள் வழங்க வேண்டியிருக்கிறது. அது – அறிவியல் அடிப்படையிலான ஒரு திட்டம்!

-‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்