கரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டதா சீனா?- விடை கிடைக்காத வினாக்கள்

By சந்தனார்

கரோனா வைரஸ் உலகமெங்கும் பரவுவதற்கு ஊற்றுக்கண்ணாக இருந்த சீனாவில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சீனாவே சொல்கிறது. சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில்தான் வைரஸ் பரவல் அதிகமாக நடப்பதாகவும், உயிர் பலிகள் அதிகம் ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனா வெளியிடும் தரவுகளை மட்டும் வைத்து அந்நாட்டை முழுமையாக நம்பிவிட முடியுமா எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இயல்புக்குத் திரும்பும் சீனர்கள்?
கரோனாவிலிருந்து மீண்டு வந்த கதையை உலகத்துக்கு உணர்த்த, சீன ஊடகங்கள் முழு வீச்சில் தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. சீன அரசு தொலைக்காட்சி சேனலான சிசிடிவி (China Central Television), சீன மருத்துவமனைகளில், கோவிட்-19 நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மட்டுமன்றி, இலவச உணவும் வழங்கப்படுகிறது என்று பாராட்டி செய்திகளை வெளியிடுகிறது. கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்கள் மெல்ல மெல்ல மீண்டு வருவதால், மருத்துவர்களும் நோயாளிகளும் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதாக வீடியோக்களும் வெளியாகின்றன.

கரோனாவைக் கட்டுப்படுத்த சீனா எடுத்துவரும் முயற்சிகளை, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐநா உதவிச் செயலாளர் மார்க் லோகாக் போன்ற தலைவர்கள் பாராட்டிய செய்திகள் சீன ஊடகங்களில் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், சீனா முன்வைக்கும் தரவுகள் முழுமையாக நம்பத்தக்கவையா என்பதுதான் முக்கியமான கேள்வி.

இன்னும் விலகாத இரும்புத் திரை
2002-03 இல், ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீன அரசு காட்டிய அலட்சியம் இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. இன்றைக்கு அமெரிக்காவின் தேசப் பாதுகாப்புத் துணை ஆலோசகராக இருக்கும் மாத்யூ போட்டிங்கர், ஒருகாலத்தில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழில், சீனாவுக்கான நிருபராகப் பணியாற்றியவர். சார்ஸ் வைரஸ் பரவலைச் சீனா எப்படி மூடி மறைக்கப் பார்த்தது என்று செய்திக் கட்டுரையாக வெளியிட்டவரான போட்டிங்கர், இன்றைக்கு, கரோனா விஷயத்திலும் சீனா வெளியிடும் தரவுகள் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என்று திகிலைக் கிளப்பியிருக்கிறார்.

சார்ஸ் வைரஸ் தாக்குதல் போல, புதிய வகை வைரஸ் தாக்குதல் நடக்கலாம் என்று கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளத்தில் எழுதியதால், சீன காவல் துறையால் எச்சரிக்கப்பட்டு, மவுனமாக்கப்பட்டவர்களில் ஒருவரான லீ வென்லியாங் கரோனா தொற்றால் உயிரிழந்தது இன்றைக்கும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், அவ்வளவு எளிதில் தனது இரும்புத் திரையைச் சீனா விலக்கிக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அலட்சியத்தின் விலை
ஆரம்பத்தில், வூஹான் நகரம் அமைந்திருக்கும் ஹூபேய் மாகாணத்துக்குள், விமானம், ரயில், கார், பஸ் மூலம் பயணம் செய்வது தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பரவல் மட்டுப்பட்டது உண்மைதான். இதைத் தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் பயணம் மேற்கொள்வது இயல்பாகவே தடைபட்டது. ஆனால், சீனாவின் மற்ற நகரங்களிலிருந்து கரோனா தொற்றுள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அவர்கள் மூலம்தான் பிற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது.

இந்நிலையில், சீனா ஒரு வாரம் முன்னதாகப் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் 67 சதவீதம் தொற்றைத் தடுத்திருக்கலாம் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சந்தேகமும் எச்சரிக்கையும்
புதிய நோயாளிகள் கண்டறியப்படவில்லை என்ற தகவல்கள் சீனாவிலிருந்து வரத் தொடங்கியபோதே, “இதை நம்ப முடியாது. இரண்டாவது அலையாக மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கலாம்” என்று பலரும் எச்சரித்தனர். அவர்கள் சொன்னதுபோலவே இன்றைக்கு நடந்திருக்கிறது.

சீனாவில் தொடர்ந்து மூன்று நாட்களாக, உள்நாட்டுக்குள்ளேயே கரோனா வைரஸ் பரவுவது நின்றுபோயிருந்ததாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், மார்ச் 22-ல், கோன்ஜோவ் மாகாணத்தைச் சேர்ந்தவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தவிர, பிற நாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்தவர்களில் 45 பேருக்குக் கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒருவேளை, சீனாவில் பயணத் தடை, ஊரடங்கு உத்தரவு போன்றவை முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டால், மீண்டும் புதிய அலையாக, வைரஸ் தொற்று பரவிவிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஆத்திரத்தில் அமெரிக்கா
கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோரை இழந்திருக்கும் அமெரிக்கா, வெளிப்படையாகவே சீனாவைக் குற்றம் சாட்டுகிறது. ‘சீன வைரஸ்’ என்று கரோனா வைரஸை அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். “அவர்கள் (சீனர்கள்) செய்த காரியத்துக்கு, உலகமே விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். இத்தனைக்கும், சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில், அந்நாடு மேற்கொண்ட நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டியவர் ட்ரம்ப்.

இன்றைக்கு அமெரிக்கா கடும் பாதிப்பைச் சந்தித்திருப்பதை அடுத்து, ட்ரம்ப் மட்டுமல்லாமல், அவரது அரசைச் சேர்ந்த அமைச்சர்களும் உயரதிகாரிகளும் சீனாவைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். ஆனால், “இப்படியெல்லாம் பேசினால், கரோனா வைரஸ் தொடர்பான துல்லியமான தரவுகளைத் தர சீனா மறுத்துவிடக்கூடும். ஆரம்பத்தில், வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை மறைப்பதில் சீன அதிகாரிகள் முனைப்பு காட்டினர் என்பது உண்மைதான் என்றாலும், கரோனா வைரஸின் மரபணு வரிசை தொடர்பான தகவல்களை உலகுக்கு சீனா வழங்கியதை மறந்துவிடக் கூடாது” என்று அமெரிக்க சுகாதாரத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்
மேலும், அமெரிக்காவுக்குக் கிடைத்துவரும் மருத்துவப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை உடைக்கும் அளவுக்குச் சீனாவிடம் வலிமை இருக்கிறது என்பதாலும், அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான அம்சம் என்பதாலும் அமெரிக்கா இப்படி தடாலடியாகப் பேசக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இவையெல்லாம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் என்று மட்டும் பார்க்க முடியாது. அமெரிக்கா கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக, இரண்டாவது அலை குறித்த தரவுகளைச் சீனா முற்றிலும் மறைத்து, கரோனா அபாயத்திலிருந்து முழுமையாக விடுபட்டுவிட்டதாகக் காட்டிக் கொண்டால், அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் நிகழ்வுகள் உலக நாடுகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் நிதர்சனம்.

சீனாவில் இரும்புத் திரை முழுமையாக விலகாத நிலையில் உலகம் நிம்மதியாக இருக்கவே முடியாது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

48 mins ago

உலகம்

9 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்