இத்தாலியில் தொடரும் சோகம்: கரோனாவுக்கு பலி 7,504ஆக அதிகரிப்பு: 74 ஆயிரம் பேர் பாதிப்பு;67 பாதிரியார்கள் உயிரிழப்பு

By ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸின் பிடியில் சிக்கி இத்தாலி நாடு சின்னாபின்னமாகி வருகிறது. அந்நாட்டில் ஒரே நாளில் 683 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் அங்கு உயிரிழப்பு 7,503 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கொடூரமான கரோனா வைரஸுக்கு இத்தாலியில் மட்டும் 31 மருத்துவர்கள், 67 பாதிரியார்கள் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸின் கோர ஆட்டம் சீனாவில்தான் அதிகம் இருந்தது என எண்ணி இருந்த நிலையில், அதைக்காட்டிலும் இத்தாலியில்தான் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இத்தாலியில் கரோனா வைரஸுக்கு உயிரிழப்பும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

அந்நாட்டு நோய் தடுப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, “ இத்தாலியில் ஒரேநாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர், 5,210 பேருக்கு கரோனா வைரஸ் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆயிரத்து386 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 57,521 பேராகவும், இதில் 3,489 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவும் இருக்கிறது. மேலும், கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 30,920 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் வீடுகளில் சுயதனிமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 112 பேர் சாதாரண வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ெபற்று வருகின்றனர்.

இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால் நாள்தோறும் கரோனா வைரஸால் குணமடைந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, 1,036 பேர் குணமடைந்தார்கள், இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,362 ஆக அதிகரித்துள்ளது.

இதில் லாம்பார்டி மண்டலம் எனச் சொல்லப்படும் பகுதியில் மட்டும் 20,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எமிலா ரோமாக்னா நகரில் 8,256 பேர், வெனிடோவில் 5,745, பிடோமென்ட் நகரில் 5,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவே என்பதால், மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், அரசின் விதிமுறைகளைப்பற்றி செயல்படுங்கள். ஏப்ரல் 3-ம் தேதிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸிலிருந்து நாடுமுழுமையாக மீள்வதற்கு பரவலான உதவிகளை மக்கள் அளித்து வருகிறார்கள் இதுவரை, 4.78 கோடி டாலர்கள் உதவி கிடைத்துள்ளன. மருத்துவமனை தவிர்த்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 720 தற்காலிக மருத்துமனை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கரோனா வைரஸுக்கு இத்தாலி 31 மருத்துவர்களை இழந்து நிற்கிறது. இதில் 5 மருத்துவர்கள் கடந்த 24 நேரத்தில் இறந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கத்தோலி்க்க தேவாலயங்களில் பணியாற்றி வந்த 67 பாதிரியார்களும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE