கரோனா வைரஸ் புல்லட் ரயில் வேகத்தில் பரவுகிறது: நியூயார்க் நகர மேயர் கவலை

நியூயார்க்கில் கரோனா வைரஸ் தொற்று புல்லட் ரயில் வேகத்தில் பரவி வருவதாக அந்நகர மேயர் கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் 55,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதில் தேசியக் காவல்படை ஆயுதப்படையினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். நியூயார்க் நகரில் மட்டும் 25,000க்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவிட் -19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில், 3 நாட்களுக்கு ஒருமுறை கரோனா தொற்று இரட்டிப்பாகி வருவதாக நியூயார்க் நகர மேயர் ஆண்ட்ரிவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரிவ் கூறும்போது, “நியூயார்க்கில் கரோனா வைரஸ் தொற்று புல்லட் ரயில் வேகத்தில் பரவுகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருகிறது. நாங்கள் நினைத்துப் பார்க்காத வண்ணம் எண்ணிக்கை கூடி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE