அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 200 பேர் பலி; 14,340 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹோப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “
கோவிட் காய்ச்சலுக்கு அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 200 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 14,340 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேரின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் 26 மாகாணங்களில் கோவிட் காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 5 நாட்களாக கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

நியூயார்க் நகரில்தான் அதிக அளவில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் 2,900 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கோவிட் காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.

நியூயார்க்கில் கோவிட்- 19 காய்ச்சலுக்கு சுமார் 10,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அந்நகர மேயர் பில் டி பிளாசியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு மருத்துவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE