'களங்கப்படுத்தும் அமெரிக்கா'-  ட்ரம்ப்பின் சீன வைரஸ் குற்றச்சாட்டுக்கு சீனா காட்டம்

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன வைரஸ் என்று குற்றம் சாட்டிய நிலையில், அமெரிக்கா தங்களைக் களங்கப்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் வூஹான் நகரத்தில் இருப்பவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வூஹான் நகரமே தனிமைப்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவில் சிலர் கரோனா வைரஸை வூஹான் வைரஸ் என்று அழைத்தனர். சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என்று சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க உயரதிகாரிகளும் சீனாவின் மீது குற்றம் சுமத்தினர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கரோனாவை சீன வைரஸ் என்று தெரிவித்திருந்தார். கரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டிய நிலையில், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறும்போது, ''இந்த வார்த்தை கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. களங்கப்படுத்துவது போல் உள்ளது.

சீனாவுக்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவிலேயே விமர்சகர்கள் இது இனவெறித் தாக்குதல் என்றும் ஆசிய- அமெரிக்க சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE