உலகம்

நியூசிலாந்து, நைஜீரியாவில் முதல் முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு

செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் கோவிட் -19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பு முதல் முறையாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நைஜீரியாவிலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள், “சமீபத்தில் ஈரானுக்குப் பயணம் புரிந்து அக்குலேண்டிற்கு வந்த 60 வயதான நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அக்குலண்ட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நியூசிலாந்தில் கோவிட் -19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து வருவதற்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில். ஈரானிலிருந்து நியூசிலாந்து வரவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் டேவிட் கிளார்க் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் முதல் முதலாக கோவிட் -19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

SCROLL FOR NEXT