உலகம்

தொடரும் கரோனா வைரஸ் அச்சம்: சீனா, தென்கொரியா அதிகம் பாதிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக சீனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அறியப்படும் சூழலில், தென்கொரியாவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 2,663-ஐத் தொட்டுள்ளது. 77,658க்கு அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை அடுத்து கரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடு தென்கொரியா. கரோனா வைரஸுக்கு தென் கொரியாவில் இதுவரை 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கூடுதலாக சுமார் 30,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

தென்கொரியாவில் தென்பகுதி நகரமான டேகு நகரம் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டேகு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் பொதுமக்களுக்கான பயணத் தடையை தென் கொரிய அரசு இதுவரை விதிக்கவில்லை.

சீனா, தென்கொரியாவைத் தவிர்த்து கரோனா வைரஸின் தாக்கம் ஈரான் மற்றும் இத்தாலியில் காணப்பட்டுள்ளது. ஈரானில் கரோனா வைரஸ் தீவிரம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், குவைத், பஹ்ரைன், ஓமன் போன்ற நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ச்சியாக உள்ள நிலையில், ''கரோனா வைரஸுக்கு தொற்றுத் திறன் உள்ளது. ஆனால், இன்னும் அது உலக அளவில் பரவவில்லை'' என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT