அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் ட்ரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்- அடுத்ததாக செனட் அவையில் தாக்கலாகிறது

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில்ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பிடனின் மகன்ஹன்டருக்கு சொந்தமான, உக்ரைனில் செயல்படும் நிறுவனம் மீதான ஊழல் புகாரை விசாரிக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்காக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்நாட்டுக்கான ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்ததாகவும் ஜோ பிடனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட ட்ரம்ப் முயன்றதாகவும் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டியது.

இதையடுத்து, இந்தப் புகார்தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் (கீழவை) நீதிக் குழு, விசாரணை நடத்தியது. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ட்ரம்ப் மீது கீழவையில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜனநாயகக் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் பிரதிநிதிகள் அவையில் ட்ரம்புக்கு எதிராக 2 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 230 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் பதிவானது.

இதையடுத்து இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதுபோல, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுத்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானமும் 229-198 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 4 இந்திய வம்சாவளி உறுப்பினர்களும் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தனர்.

அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் அவமானகரமான அரசியல் நிகழ்வுகளில், ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானமும் ஒன்று என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக செனட் அவையில் ட்ரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. அங்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெறும். இதிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், ட்ரம்பின் பதவி பறிபோவது உறுதி ஆகிவிடும்.

எனினும், செனட் அவையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இந்தத் தீர்மானம் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செனட் அவையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவளித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெற முடியும். எனவே, குடியரசு கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும். இதுசாத்தியமில்லை என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE