ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்த 3 இந்தியப் பொறியாளர்கள் விடுதலை?

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன், தலிபான் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற இந்தியப் பொறியாளர்களில் 3 பேரை விடுவித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பொறியாளர்கள் 3 பேருக்குப் பதிலாக, தலிபான் தீவிரவாதிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வடக்கில் உள்ள பாக்லான் மாநிலத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணியில் இந்தியப் பொறியாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் தீவிரவாதிகள், இந்தியப் பொறியாளர்கள் 8 பேரையும் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் ஒருவரை மட்டும் கடந்த மார்ச் மாதம் விடுவித்தனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் படையினர் பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளை விடுவித்ததற்குப் பதிலாக இந்தியர்கள் 3 பேர் விடுவிக்கப்பட்டார்களா அல்லது அமெரிக்கா பிடித்து வைத்திருந்த தலிபான்களை விடுவித்ததால் இந்தியர்கள் 3 பேர் விடுவிக்கப்பட்டார்களா என்ற கேள்விக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள்.

ஆனால், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்களும், ஏஎப்பி போன்ற வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் தலிபான் தீவிரவாதிகள் 11 பேர் ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கின்றன. எந்த இடத்தில் வைத்து, தலிபான் தீவிரவாதிகளும், இந்தியர்கள் 3 பேரும் மாற்றிக்கொள்ளப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்தும் எந்தவிதமான தகவலும் தெரிவிக்க ஆப்கன் அதிகாரிகள் மறுக்கின்றனர்.
ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், "விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளில் ஷேக் அப்துர் ரஹிம், மவ்லவி அப்துல் ரசித் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியர்கள் விடுவிக்கப்பட்ட விவரம், அவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகமும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE