காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது: ஐ.நா.வில் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது பேச்சு

By செய்திப்பிரிவு

நியூயார்க்

காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பேசி சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வில் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி பேசி, தாயகம் திரும்பினார். பிரதமர் மோடி பேசிய பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்தியா குறித்தும் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஐ.நா.வில் நேற்று பேசும்போது, காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் விளாதிவோஸ்தக் நகரில் இம்மாதத் தொடக்கத்தில் பிரதமர் மோடி சந்தித்து மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது நீண்ட நேரம் பேசினார். இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, நட்புறவு, வர்த்தகம் குறித்து நட்பு பாராட்டிய நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் வேறு நிலைப்பாடு எடுத்துள்ளார்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடுவதையும், பேசுவதையும் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஐ.நா.வில் சீனா காஷ்மீர் குறித்துப் பேசியபோதும்கூட இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தைப் பேசியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் என்ன பதிலடி தரப்படும் எனத் தெரியவில்லை.

மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது பேசுகையில், "காஷ்மீரை இந்தியா ராணுவப் படைகள் மூலம் கைப்பற்றி, அதை ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் செயல்பாட்டுக்குப் பல காரணங்கள் இருக்கலாம் ஆனால், அது தவறானது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேசி இந்தியா பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஐ.நா.வில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ரஷ்யாவில் விளாதிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், நானோ, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீருங்கள் என்று கூறினேன்.

இந்தியாவுக்குப் பேச்சுவார்ததை நடத்துவதில் அதிகமான அனுபவம் இருக்கிறது. அதன் மூலம சென்றால் பிரச்சினைகளை முறியடிக்க முடியும், தவிர்க்கலாம். அதைவிடுத்து, ஆக்கிரமிப்பு மூலம் காஷ்மீரை அடைய வேண்டும்.

ஆனால், என்னுடன் நடத்திய பேச்சில் பிரதமர் மோடி எதையும் செய்வதாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், தீவிரவாதப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அங்கு பேச்சு நடத்துவதுதான் சிறந்தது எனத் தெரிவித்தேன்'' என்று மகாதிர் முகமது தெரிவித்தார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE