மீண்டும் பேச்சு தொடங்கும் முன் பாகிஸ்தானிடமிருந்து உறுதியான நடவடிக்கைகள் தேவை: ட்ரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

நியூயார்க்

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தொடங்கும் முன், அந்தநாட்டிடம் இருந்து உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பேச்சின் போது பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். ஐ.நாவில் நடக்கும் ஆண்டுபொதுக் குழுக் கூட்டத்தில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றும் முன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உலகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் சேர்ந்து பங்கேற்றார். அதன்பின் நேற்று ஐ.நா.வில் அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார். இரு தலைவர்களும் ஏறக்குறைய 40 நிமிடங்கள் பேசினார்கள்.

பிரதமராக மோடி 2-வது முறையாக பதவி ஏற்றபின் 4-வது முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேற்றுச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பிற்கு பரிசாக வழங்கினார்.

இரு தலைவர்களும் இருநாட்டு நட்புறவு, தொழில், வர்த்தகம், பாதுகாப்பு, உலகப் பிரச்சினைகள், காஷ்மீர் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே நிருபர்களிடம் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

இந்த சந்திப்பில் அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்திப் பேசியது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோலலே நிருபர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் இடையிலான இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் வரை நடந்தது. இந்தசந்திப்பில் இருநாட்டு வர்த்தக உறவு, பாகிஸ்தான் பகுதியில் இருந்துவரும் தீவிரவாதம் ஆகியவை குறித்துப் பேசினார்கள்.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்தும், இந்தியா சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடி விளக்கமாக அதிபர் ட்ரம்பிடம் பேசினார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் 42 ஆயிரம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. தீவிரவாதத்தை எதிர்க்க சர்வதேச சமூகத்திடம் இருந்து ஆதரவு கேட்டு வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவிஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார், நட்புறவை புதுப்பிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி லாகூருக்கு குறைந்தபட்ச பாதுகாப்புடன் சென்றுவந்தார்.

ஆனால், பிரதமர் மோடி லாகூர் சென்றுதிரும்பியவுடன் பதான்கோட் விமானத் தளத்தில் தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த குற்றச் செயலுக்கு காரணமானவர்களை இதுவரை நீதிமுன் பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்று அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தயக்கமும் இல்லை. ஆனால் பேச்சு வார்த்தையை தொடங்கும் முன் அந்த நாடு சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கமாட்டார்கள் என்று தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், தீவிரவாத பிரச்சினை குறித்தும், அதை சமாளிக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி விளக்கினார், அதை அதிபர் ட்ரம்பும் புரிந்து கொண்டு இதைத்தான் நாங்களும் எதிர்கொள்கிறோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

உலகில் அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் 2-வதாக இந்தியா இருந்தபோதிலும், ஐஎஸ் தீவிரவாத அமைப்பிலும், அல்கொய்தா அமைப்பிலும் இந்தியாவில் உள்ளவர்கள் பெரும்பாலும் சேர்வதில்லை. இங்குள்ள மக்கள் தீவிரவாதத்தை விரும்புவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இவ்வாறு கோகலே தெரிவித்தார்.


பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE