நிலைப்பாட்டை மாற்றும் அதிபர் ட்ரம்ப் : காஷ்மீர் விவகாரம், பிரதமர் மோடி குறித்து பேச்சு: பதில் அளிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

நியூயார்க்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் பேசியதற்கும், பிரதமர் மோடியின் பேச்சு முரட்டுத்தனமானது என்று பேசியதற்கும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்தான் எதையும் தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலானது. இதில் மூன்றாவது நாடு தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்மாமல் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப் அப்போது அந்தப் பேச்சு குறித்து ஏதும் குறிப்பிடாமல் இருந்துவிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடான சந்திப்பின்போது பிரதமர் மோடியின் பேச்சு "மிகவும் முரட்டுத்தனமானது" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப் " நான் இந்தியப் பிரதமர் பேச்சைக் கேட்டேன். மிகவும் முரட்டுத்தனமான பேச்சு அது. அவர் பேசும்போது நான் மேடையில்தான் இருந்தேன். இப்படிப்பட்ட பேச்சை நான் கேட்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அங்குதான் அமர்ந்திருந்தேன்" எனத் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், " நான் சிறந்த நடுவராக இருப்பேன். இந்தியா, பாகிஸ்தான் சம்மதித்தால், காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்யத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என பலமுறை தெரிவித்தும் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாகக் குறிப்பிட்டு வருகிறார். ஏற்கெனவே பிரதமர் மோடியை இரு முறை சந்தித்த போதெல்லாம் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறிவிட்டு, பாகிஸ்தான் பிரதமருடன் பேசும்போது காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அதிபர் ட்ரம்ப் பேசி நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கிதேஷ் சர்மாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவி்ட்டார். மறாக, "அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேச உள்ளார்கள். அந்தச் சந்திப்பு வரை பொறுமையாக இருங்கள்" எனத் தெரிவி்த்தார்

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவேஷ் குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், "அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு முடியட்டும். அதுவரை பொறுமையாக இருங்கள். நம்முடைய நிலைப்பாடு என்னவென்று உங்களுக்குத் தெரியும். ஏற்கெனவே நாங்கள் தெளிவாகக் கூறிவிட்டோம். பொறுமையாக இருங்கள்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE