சென்னை-விளாதிவோஸ்டாக் நகரம் இடையே கடல்சார் வழித்தடம்: இந்தியா, ரஷியா இடையே ஒப்பந்தம்

விளாதிவோஸ்டாக்,

சென்னை மற்றும் ரஷியாவின் விளாதிவோஸ்டக் நகரம் இடையே கடல்சார் வழித்தடம், தகவல் தொடர்புகள் உருவாக்க இந்தியா, ரஷியா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றார். ரஷ்யாவின் தூரக் கிழக்கு மண்டலத்துக்கு பிரதமர் மோடி செல்வது இதுதான் முதல் முறையாகும்.

ரஷ்யாவின் விளாதிவோஸ்டக் நகரை இந்திய நேரப்படி காலை 5.09 மணிக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளி்க்கப்பட்டது. அதன்பின் அதிபர் விளாதிமிர் புதினைச் சந்தித்து பிரதமர் மோடி. பிரதமர் மோடியைச் சந்தித்ததும், அதிபர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார்.

இரு தலைவர்களும் இரு தரப்பு நாடுகள் தொடர்பான விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினர். அதன்பின் ஜேஸ்டா கப்பல் கட்டும் துறைமுகத்தை அதிபர் புதினுடன் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் அடுத்த ஆண்டு நடைபெறும் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் வழித்தொடர்பு, எரிசக்தி, இயற்கைஎரிவாயு, பெட்ரோல், தகவல் தொடர்பு, கலாச்சாரம் உள்ளிட்ட 15 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், அணு சக்தி, பாதுகாப்பு, விமானம், கடல்சார் தொடர்பு, போக்குவரத்து கட்டமைப்பு, உயர் தொழில்நுட்பம், மக்களுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின் இருதலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். பிரதமர் மோடி பேசும் போது, காஷ்மீர் மாநிலத்துக்கான 370 பிரிவை திரும்பப் பெற்றது உள்நாட்டு விவகாரம் என்பதை சுட்டிக்காட்டி பேசினார், அதேசமயம், இந்தியாவின் முடிவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளதையும் வரவேற்றார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

“இந்தியாவும், ரஷியாவும், எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் மூன்றாவது நாடு தலையிடுவதையும், தாக்கம் செலுத்துவதையும் கடுமையாக எதிர்க்கும் மனநிலை கொண்டவை. சென்னைக்கும், விளாதிவோஸ்டக் நகரம் இடையே முழுமையான கடல்சார் வழித்தடம் கொண்டுவருவது குறித்தும், கடல்சார் தகவல் தொடர்பை மேம்படுத்துவது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவின் துணையுடன் அணுஉலைகளை சிறப்பாக மேம்படுத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரஷியா இந்தியா நட்புறவு என்பது தலைநகரத்தோடு முடிந்துவிடுவது அல்ல, மக்களுக்கு இடையிலான உறவாகவும் கொண்டிருக்கிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு ரஷிய விஞ்ஞானிகள் உதவ உள்ளார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வேகமாக வளர்நது வருகிறது. நம்முடைய சிறப்பான, முன்னுரிமை அளிக்கும் ராஜாங்க கூட்டுறவு இருநாடுகளுக்கு இடையே மட்டும் நலம் விளைவிக்காமல், மக்களின் வளர்ச்சிக்கும் பயன்பட்டு வருகிறது.

ரஷியா இந்தியாவுக்கு நெருங்கிய நட்பு நாடு, நம்பிக்கையான தோழமை நாடு. எனக்கு ரஷியாவின் மிக உயரிய விருது அளித்து 130 கோடி இந்தியர்களையும் கவுரவித்துவிட்டீர்கள். இது இரு நாடுகளின் நட்புறவைத்தான் காட்டுகிறது”.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிபர் விளாதிமிர் புதின் பேசுகையில், " கடந்த ஆண்டு இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு கூட்டுறவில் முன்னுரிமை அளித்தோம். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 17 சதவீதம் வளர்ந்து 1100 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 33 லட்சம் டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தோம், 5.50 லட்சம் டன் எண்ணெய் பொருட்கள், 45 லட்சம் டன் நிலக்கரி ஏற்றுமதி செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE