150 ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து, 1997-ல் சீனாவோடு இணைந்தது முதலே ஹாங்காங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்தன. எனவே சமீப நாட்களாக ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்கள் ஹாங்காங்குக்கும் ஏன் சீனாவுக்கும் கூட புதிதல்ல.
எனினும் இம்முறை ஹாங்காங்கில் நடந்த போராட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலக நாடுகள் பலவற்றை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதற்கு ஹாங்காங் மாணவர்களே முக்கியக் காரணம்.
''சீன மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல, சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் நமக்கு எதிரி என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம் என்று நம்புகிறேன். மக்களிடைய வெறுப்பு பரவக் கூடாது. ஜனநாயகத்தை நிறுவுவது மற்றும் சுயாட்சிக்காகவே நாங்கள் போராடுகிறோம்'' என்று சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்கும் கூட்டத்தில் உரத்த குரலில் பேசினார் இளைஞர் செயற்பாட்டு அமைப்பான டிமோசிஸ்டோவின் நிறுவனரான நாதன் லா (26).
யார் இந்த நாதன் லா?
ஹாங்காங் சீனாவுடன் இணைந்திருக்க வேண்டுமா? என்று மக்களின் கருத்தை அறிய, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட 'அம்ப்ரல்லா மூவ்மென்ட்' போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த நாதன் லா. இந்தப் போராட்டத்தை சீனா அடக்கினாலும், இப்போராட்டத்தின் மூலம் ஹாங்காங் மக்களின் நம்பிக்கைக்குரியவரானார் நாதன் லா.
இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடந்த ஹாங்காங் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்றார் நாதன் லா. இந்தத் தேர்தலில் சீன எதிர்ப்புக் கொள்கை கொண்ட சிலரும் வெற்றி பெற்றனர்.
ஆனால், இந்த வெற்றிக்குரிய அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைக்காமல் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சீனா அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. நாதன் லா, ட்வர்ட் இயு, லாவ் சியு-லாய், லியுங் கவோக் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஹாங்காங் அரசு தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணத்தின்போது நாதன் லா, யாவ் வெய்-சிங், லியுங் ஆகியோர் சீனாவுக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அவர்களின் உறுதிமொழி செல்லாது என்று கூறி அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது ஹாங்காங் அரசு. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் நாதன் லா.
நாதன் லா மட்டும் அல்ல ஜோஷ்வா வாங் (22) போன்ற ஹாங்காங் மாணவ இயக்கத்தைச் சேர்ந்த பலரும் ஹாங்காங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் சிறை தண்டனை பெற்றனர்.
இந்த மாணவர் குழுக்கள்தான் மீண்டும் சீனாவுக்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தை ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் கையில் எடுத்துள்ளன.
ஜோஷ்வா வாங் (இடது), நாதன் லா (வலது)
முன்னதாக, இந்தப் போராட்டத்துக்கு பொதுவான தலைவர் எவரும் இல்லை. இதனால் இந்தப் போராட்டம் வலுவான பாதையை நோக்கி நகராது என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், சில வன்முறைச் சம்பவங்களை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் சமூக ஊடகங்கள் மூலம் சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான இந்தப் போராட்டத்தை 11 வாரங்களாக மாணவர் குழுக்களும் அதன் தலைவர்களும் வெற்றிகரமாக நடத்திச் சென்றிருக்கின்றனர்,
இதில் ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் விக்டோரியா பார்க்கில், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொட்டும் மழையில் கையில் குடையுடன் எந்தவித அசம்பாவிதமும் பிறருக்கு நிகழாதபடி தங்களது ஜனநாயக உரிமையை உலகிற்குக் காட்டியுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக ஹாங்காங் போராட்டக்காரர்கள் ஹாங்காங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை முற்றுகை செய்ததன் மூலம் தங்கள் போராட்டத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதன் விளைவாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், ஜனநாயகக் கட்சியின் பிற தலைவர்கள் என அனைவரும் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அது மட்டுமில்லாது சர்வதேச ஊடகங்களின் கவனமும் ஹாங்காங் பக்கம் திரும்பியது.
போராட்டக்காரர்கள் முன் வைக்கும் ஐந்து நிபந்தனைகள்
குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகைசெய்யும் மசோதாவை ஹாங்காங் அரசு முன்மொழிந்ததைத் தொடர்ந்து இதனை எதிர்த்து மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று ஹாங்காங் வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய போராட்டமாக உருமாறியுள்ளது.
தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, குற்றவாளிகளை சீனாவுக்குக் கடத்தும் மசோதா இறந்துவிட்டதாக கேரி லேம் அறிவித்தாலும் மசோதாவை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐந்து நிபந்தனைகளை ஹாங்காங் போராட்டக்காரர்கள் முன் வைத்துள்ளனர்.
* குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா முழுமையாக பின்வாங்கப்பட வேண்டும்.
* நடுநிலை அமைப்பு ஒன்று போராட்டக்கார்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடத்த மோதலை விசாரிக்க வேண்டும்.
* போராட்டத்தை கலவரம் என்று கூறியதை திரும்பப் பெற வேண்டும்.
* போலீஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும்.
* தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும்.
சீன நிர்வாகத் தலைவர் கேரி லேம்.
ஹாங்காங்கைப் பொறுத்தவரை சட்டப்பேரவை உறுப்பினர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் நிர்வாகத் தலைவரை சீனாவுக்கு இணக்கமான சிறிய குழுதான் தேர்ந்தெடுக்கிறது. நிர்வாகத் தலைவரைத் தாங்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் ஹாங்காங் மக்களின் நீண்டகால கோரிக்கை.
2017-ம் ஆண்டு முதல் ஹாங்காங் மக்கள் தேர்தல் மூலம் தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என சீனா உறுதியளித்தது. ஆனால், இதுவரை சீனா யாரை அடையாளப்படுத்துகிறதோ அவர்கள் ஹாங்காங்கை ஆட்சி செய்து வருகிறார்கள். சீனாவுக்கு எதிராக குரல் எழுபுபவர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
சீனாவுக்குப் பின்னடைவு
ஹாங்காங்கின் இந்தத் தொடர் போராட்டம் உலக நாடுகள் மத்தியில் சீனாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஹாங்காங் நிர்வாக அதிகாரியும், தீவிர சீன ஆதரவாளரான கேரி லேம் மீதான அழுத்தத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலைக்கு சீனா தள்ளப்பட்டுள்ளது.
தொடர் போராட்டங்களைத் தடுக்க, ஹாங்காங் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஹாங்காங்கின் எல்லையில் ராணுவத் தளவாடங்களை நிறுத்தியும் வைத்துள்ளது சீனா. எனினும் ஆசியாவின் மிகப் பெரிய வர்த்தக நிதி மையமாக இருக்கும் ஹாங்காங் மீது, ராணுவ நடவடிக்கை எடுத்தால் இது பொருளாதார ரீதியாக சீனாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் சீனாவால் இந்த இவ்விகாரத்தில் தனது வழக்கமான பாணியான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முடியவில்லை.
மேலும் ஹாங்காங் விவகாரத்தை அமெரிக்காவின் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைத்துத் தரப்பும் கூர்மையாக கவனித்து வருவதால் இதனையும் கவனத்தில் கொண்டு மெதுவாக காயை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் சீனா இருக்கிறது.
எது எப்படி இருப்பினும், சீனாவுக்கு எதிரான தங்களது எதிர்ப்பு மனநிலையையும், ஹாங்காங்கின் நிலைப்பாட்டையும் உலக நாடுகளுக்குப் பரவலாக தெரிவித்ததன் மூலம் தங்களது பாதி வெற்றியை அடைந்திருக்கிறார்கள் ஹாங்காங் மாணவர்கள்.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago