வாஷிங்டன்,
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் 30 நிமிடங்கள் பேசிய பின், இந்த அறிவுரையை இம்ரான் கானுக்கு அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை திரும்பப்பெற்றது. அந்த மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான வர்த்தக உறவு, பஸ், ரயில் போக்குவரத்தை ரத்து செய்தது. மேலும், சர்வதேச அளவிலும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றபோதிலும் பாகிஸ்தான் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வமில்லாத ஆலோசனைக் கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரம் ஆலோசிக்கப்பட்டபோதிலும் இந்தியாவுக்கு எதிராக எதையும் செயல்படுத்த முடியவில்லை.
இதனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவ்வப்போது இந்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், தேவையற்றை வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறது. அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்தார். இது பிராந்திய அமைதியைக் குலைப்பதாக இருந்து வந்தது.
இந்த சூழலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் நேற்று தொலைபேசி வாயிலாக 30 நிமிடங்கள் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளார்.
அது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ''பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினர். அப்போது, இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப்பிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளை, சில தலைவர்கள் வெளியிட்டு வருவது, பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டார். எல்லை தாண்டிய பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடியுடனான உரையாடலின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியுடான பேச்சுக்குப் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்படுங்கள், தேவையற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், " இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்குப்பின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்பட வேண்டும், இந்தியாவுக்கு எதிராக தேவையற்ற பேச்சுகளைப் பேச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்பு நாடுகளும் பதற்றத்தை அதிகப்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான பொருளாதார, வர்த்தக கூட்டுறவை வலுப்படுத்தவும் அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் நடத்திய பேச்சு குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், "வர்த்தகம், இரு நாடு நட்புறவை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து எனது சிறந்த நண்பர்களான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன். குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். கடினமான சூழல்தான், ஆனாலும், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago