எல்லையில் பதற்றம்; தேசிய பாதுகாப்புக் குழுவுடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை: கொத்து குண்டுகள் வீசப்போவதாக இந்தியா மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்,

இந்தியாவுடன் திடீரென பதற்றம் அதிகரித்து இருப்பதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேசிய பாதுகாப்புக் குழு, ராணுவ அதிகாரிகளுடன் இன்று திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு எழுப்பியதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தை அவசரமாக இம்ரான் கான் கூட்டினார்.

பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் காட்டக், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமது குரேஷி, ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, இந்திய அரசு அங்கு படைகளைக் குவித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் சென்ற பயணிகள் அனைவரும் உடனடியாக மலையில் இருந்து கீழே இறங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது. 

ரயிலும், விமானத்திலும் யாத்ரீகர்கள், பக்தர்கள் விரைவாக வீடுகளுக்குச் செல்ல தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கிடையை ஸ்ரீநகரில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனமும் காலவரையின்றி மூடப்பட்டு மாணவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஸ்ரீநகரில் கிரிக்கெட் பயிற்சியில் இருந்த வீரர்களும் பயிற்சியை ரத்து செய்துவிட்டு, வீடுகளுக்குச் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வீரர்களுக்குப் பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்டுவிட்டார். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இதற்கிடையே  பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டார். 

அவர் அதில் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்யவேண்டிய நேரம் இது. எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது, வித்தியாசமான நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்படுகின்றன. பிராந்தியப் பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் மாறும் சக்தி இருக்கிறது. ஐ.நா.வின் தீர்மானத்தின்படி காஷ்மீர் மக்கள் தங்கள் விருப்பப்படி, உரிமையை நிலைநாட்டி சுதந்திரமாக வாழ கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். 

எல்லைப் பகுதியில் கொத்து குண்டுகளை வீசுவதற்கு இந்தியா  திட்டமிட்டுள்ளது. இதை ஐ.நா. கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டும். மக்கள் மீது இந்திய ராணுவம் தேவையின்றித் தாக்குதல் நடத்துவதையும் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE