முதல் முறை: இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண் ப்ரீத்தி படேல் நியமனம்

லண்டன், பிடிஐ

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட போரிஸ் ஜான்ஸன் அமைச்சரவையில் முதல் முறையாக இந்திய வம்சாவளிப் பெண் ப்ரீத்தி படேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ப்ரீத்தி படேல் இந்தியாவில் பிறக்கவில்லை என்றபோதிலும் இவரின் தாய்,தந்தை இருவரும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள். 

ப்ரீத்தி படேல் தவிர நிதியமைச்சராக பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சாஜித் ஜாவித், சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக அலோக் சர்மா, நிதி அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் அல்லது இணையமைச்சராக ரிஷி சுனக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தெற்காசியப் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 47 வயது ப்ரீத்தி படேல் தீவிரமான பிரெக்ஸிட் ஆதரவாளர். பிரெக்ஸிட் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்த கன்சர்வேட்டிவ் (பழமைவாதக் கட்சி) கட்சியின் தலைவரும் பிரதமருமான போரிஸ் ஜான்ஸனுக்கு பக்கபலாக ப்ரீத்தி படேல் செயல்பட்டார்.

கடந்த 2010-ம் ஆண்டு எசெக்ஸ் மாநிலத்தில் உள்ள விதாம் பகுதியில் இருந்து எம்.பி.யாக ப்ரீத்தி படேல் தேர்வு செய்யப்பட்டார். டேவிட் கேமரூன் தலைமையிலான அரசில் இளநிலை அமைச்சராக ப்ரீத்தி படேல் நியமிக்கப்பட்டு இருந்தார்.

2014-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தில் அமைச்சராக இருந்தார்.  அதன்பின் 2015-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ப்ரீத்தி படேல் வென்றபின், அவரை வெளியுறவுத்துறைக்கு உயர்த்தினார் முன்னாள் பிரதமர் தெரஸா மே. ஆனால், பிரதமர் தெரஸா மேயுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், கடந்த 2017-ம் ஆண்டு அமைச்சர் பதவியை ப்ரீத்தி படேல் ராஜினாமா செய்தார். 

உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி படேல் நிருபர்களிடம் கூறுகையில், "புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்ஸன் தலைமையில் இங்கிலாந்தின் எதிர்காலம் புதிய இலக்கை நோக்கி நகரும், அதற்கான செயல்திட்டமும் உருவாக்கப்படும். இங்கிலாந்தின் நட்புறவுகளான அண்டை நாடுகள், நட்பு நாடுகளான இந்தியா ஆகியவற்றுடன் உறவு பலப்படுத்தப்படும். 

இந்தியாவில் இருக்கும் எங்களின் நண்பர்களுடன் புதிய வர்த்தக நட்புறவை உருவாக்கிப் பாதுகாப்போம், அதுமட்டுமல்லாமல் சட்டம், ஜனநாயகம், தொழில்முனைவோருக்கான ஊக்கம் ஆகியவற்றை இரு தரப்பு நாடுகளும் பகிர்ந்து கொள்வோம்" எனத் தெரிவித்தார்.

 
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE