அமெரிக்காவில் இந்தியாவின் மகள் சிறப்புத் திரையிடல்

By ஏபி

இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம், அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை மையாமாக வைத்து லெஸ்லி உட்வின் ஆவணப்படம் இயக்கினார். அதில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், பெண்களைப் பற்றி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. தயாரிப்பில் பங்கு வகித்த பிபிசி-யில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பட்டாலும், இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் உள்ள பரூச் கல்லூரியில் 'பிகாஸ் ஐயாம் எ கேர்ள்' என்ற அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டது.

இந்த ஆவணப்படத்தின் சிறப்புத் திரையிடலில், கல்லூரி மாணவர்கள், ஹாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட 650 பங்கேற்பாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி 'நிர்பயா'-வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க நடிகை மெர்லின் ஸ்ட்ரீப் இந்தச் சிறப்புத் திரையிடலை தொடங்கிவைத்தார்.

'பிகாஸ் ஐயாம் எ கேர்ள்' என்ற அமைப்பின் தூதுவர்களான மெர்லின் ஸ்ட்ரீப் மற்றும் இந்திய நடிகையான பிரீடா பின்டோ சிறப்பு பங்கேற்பாளராக கலந்துகொண்டனர்.

ஆவணப்படம் தொடங்குவததுக்கு முன்னர் பேசிய மெர்லின் ஸ்ட்ரீப், "மிகக் குறைந்த காலம் வாழ்ந்து மறைந்த நிர்பயாவுக்கு அஞ்சலி செலுத்துவதன்மூலம் அவரது மேன்மையை இந்தத் தருணத்தில் நாம் போற்றியுள்ளோம்.

இந்தப் படம் நிச்சயம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டும். இது இந்தியாவை அவமானப்படுத்தும் ஆவணப்படம் இல்லை. இதில் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கலாமே தவிர, இந்தப் படத்தின் மூலம் வன்முறை பரப்பப்படவில்லை.

பலாத்காரச் சம்பவங்களை நாம் வழியில் ஒழிக்க வேண்டும். இந்தியாவின் மகள், தற்போது நமது நாட்டின் மகளாகவும் இருக்கிறார்" என்றார்.

பிரீடா பின்டோ பேசும்போது, "இது இந்தியாவின் பிரச்சினை மட்டும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் இந்தப் பிரச்சினை உள்ளது. 2015-ல் எந்த ஒரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்காமல் இல்லை. அனைத்து மூலைகளிலும் இவை நிலவுகின்றன" என்று குறிப்பிட்டார்.

"இந்தியாவின் மகள்" ஆவணப்படம் நார்வே, சுவிட்ஸர்லாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் திரையிடப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE