மொஹம்மத் யாசிர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரவூஃப் அராஃபத் அல் கத்வா என்னும் யாசிர் அராஃபத், நவம்பர் 11, 2004 அன்று தமது 75வது வயதில் இறந்தார். முன்னதாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சில நாள்கள் அவர் கோமா நிலையில் இருந்தார்.
பாலஸ்தீனத்து அரேபியர்கள் ஒருத்தர் விடாமல் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தித் தங்கள் தனிப்பெரும் தலைவரை நல்லடக்கம் செய்தார்கள்.
அடுத்த வருஷம் செப்டெம்பரில் அராஃபத் மறைவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்கிற வதந்தி மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியது. பாலஸ்தீனியர்களின் பிராண(னை வாங்கும்) சினேகிதர்களான இஸ்ரேலியர்கள், அவர் பால்வினை நோயால் இறந்தார் என்றொரு வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.
கொதித்துப் போன பாலஸ்தீனியர்கள் அராஃபத்தின் மரணம் குறித்த உண்மைத் தகவல்களை அறிவியல்பூர்வமாக உலகுக்கு நிரூபிக்க விரும்பினார்கள். அராஃபத்தின் பிரத்தியேக மருத்துவர் அஷ்ரஃப் அல் குர்தி மற்றும் இன்னொரு மருத்துவரான பாஸம் அபு ஷெரீஃப் என்கிற இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் இறுதியில் யாசிர் அராஃபத் தாலியம் என்னும் ஆட்கொல்லி விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார் என்று சொல்லப் பட்டது.
யாசிர் அராஃபத்தை இஸ்ரேலியர்கள்தாம் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள் என்று உலகம் முழுதும் பேச ஆரம்பித்தார்கள். ஒரு யூத மருத்துவரே அராஃபத் விஷ உணவின்மூலம்தான் இறந்திருக்க வேண்டும் என்று அன்றைக்குச் சொன்னார். நோய்வாய்ப்பட்ட தமது கடைசிக் காலத்தில் அராஃபத் பாரிஸில் உள்ள ஒரு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவரது மனைவி சுஹா அராஃபத் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி என்பது இதன் காரணம்.
அராஃபத்தின் மரணத்தில் எழுந்த சந்தேகங்க ளின் விளைவாக திருமதி சுஹா அராஃபத் தமது சொந்த முயற்சியில் பிரெஞ்சு ஆய்வாளர்களிடம் வழக்கைச் சொல்லி பொறுப்பை ஒப்படைத்து உண்மையைக் கண்டறிந்து சொல்லக் கேட்டுக்கொண்டார்.
வந்த பதில் பொலோனியம் 210 என்னும் கதிரியக்கம் சங்கதி அவர் உடலுக்குள் செலுத்தப்பட்டு இறந்திருக்கிறார் என்று சொன்னது. ஆனாலும் இறுதி அறிக்கை அளித்த மருத்துவமனையானது, அராஃபத் இயற்கையான முறையில்தான் மரணமடைந்தார் என்று எழுதிக் கொடுத்துவிட்டது. இந்தக் குழப்படி அறிக்கைகள், முடிவு வெளியீடுகளில் என்னமோ உள்குத்து இருக்கிறது என்று நினைத்த அல் ஜசீரா, அராஃபத்தின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கும் புலனாய்வில் இறங்கியது.
ஒன்பது மாதப் புலனாய்வு. ஸ்விட்சர லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்களின் உதவியுடன் அராஃபத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை ஆராய்ந்து ஜூலை 4, 2012 அன்று தனது முடிவைத் தெரிவித்தது. சந்தேகமில்லை. பொலோனியம் அவர் உடலுக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது. உணவில் கலந்தோ அல்லது வேறெப்படியோ. அராஃபத்தின் மரணத்துக்கு அதுதான் காரணம்.
இடையே இந்த ஆராய்ச்சியில் ஒரு ரஷ்ய ஃபாரன்சிக் குழுவினரும் ஈடுபட்டார்கள். அவர்களும் இதே முடிவுக்குத்தான் வந்து சேர்ந்தார்கள். இது இயற்கை மரணமல்ல. திட்டமிட்ட படுகொலை. விஷம் கொடுப்பதே தெரியாமல் கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். கொடுக்கப்பட்ட விஷம், பொலோனியம் இருநூற்றுப் பத்துதான். அதில் சந்தேகமில்லை.
சென்ற வருடம் இந்த ஆராய்ச்சி உற்சவங்கள் அனைத்தும் ஒருவாறு ஓய்ந்து அரபுலகமே அராஃபத்துக்காக வருத்தப்பட்டு அடுத்த கவலையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்ட நிலையில், இன்றைக்கு மீண்டும் அராஃபத்தின் மரணம் பேசுபொருளாகியிருக்கிறது.
மீண்டும் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள். மீண்டும் ஆய்வு முடிவுகள். இல்லை. பொலோனியமெல்லாம் கொடுக்கப்பட்டதற்கான தடயமே இல்லை. அராஃபத் இயற்கையாகத்தான் இறந்திருக்கிறார். செய்திகளைத் திரிக்க வேண்டாம். இந்த ஆய்வுகளும் முடிவுகளும் அராஃபத் விஷயத்தில் இனி அடிக்கடி வரத்தான் போகின்றன. காலம் உள்ள அளவும் அவரது பெயரை நினைவுகூர அவரது மரணத்தைப் பயன்படுத்த முடிவு செய்துவிட்டார்கள் போலி ருக்கிறது.
வாழ்ந்த காலத்தில் செய்த செயல்களை மறைக்கவும் மறக்கவைக்கவும் இதனைக் காட்டிலும் உன்னதமான வழிமுறை வேறில்லை என்கிற முடிவுக்கு இனி நாம் வரலாம்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago