வங்கதேச அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா
வங்கதேச நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அந்த நாட்டு சட்டத்தின்படி அடுத்த 90 நாள்களுக்குள் அதாவது ஜனவரி 24-க்குள் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை நடத்துவதற்காக காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை முதல் 84 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு வங்கதேச தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள 17 கட்சிகளும் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் அந்த நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தால் கடந்த இரண்டு நாள்களில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் பஸ்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பிரதான தொழிலான ஜவுளி உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் வேறு வழியின்றி வங்கதேச அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமரின் செய்தித் துறை செயலர் அப்துல் கலாம் ஆசாத் டாக்காவில் திங்கள்கிழமை கூறியது: மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 52 அமைச்சர்களும் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் அளித்துள்ளனர். ராஜிநாமா ஏற்கப்படாத அமைச்சர்கள் பதவியில் நீடிப்பார்கள் என்றார்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் புதிய அரசை அமைக்க பிரதமர் ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளார். இதன்படி புதிய அரசில் இடம்பெறும் வகையில் குறிப்பிட்ட சில அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களை அவர் ஏற்கமாட்டார் என்றும் இதர அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்கள் அதிபர் மாளிகைக்கு அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்துக் கட்சி அரசை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே நிராகரித்துள்ளன. அதற்குப் பதிலாக எந்தக் கட்சியையும் சாராத காபந்து அரசை அமைக்கக் கோரியே எதிர்க்கட்சிகள் இப்போது முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் அந்த நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
பொதுத் தேர்தலை நடத்தக் கோரி கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.