வளர்ந்த நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 2 மடங்காக அதிகரிப்பு
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டுக்குரிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
34 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பு, சிலியைத் தவிர மற்ற 33 நாடுகளின் வேலைவாய்ப்பு நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கடந்த 2007-ம் ஆண்டு இறுதியில் சர்வதேச நிதி நெருக்கடி தொடங்கியபோது, ஓ.இ.சி.டி. அமைப்பின் உறுப்பு நாடுகளில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 86 லட்சமாக இருந்தது. கடந்த 2008-ல் நிதி நெருக்கடி உச்சத்தை அடைந்ததால் சிக்கன நடவடிக்கையாக ஆட்குறைப்பு செய்தன.
இதனால், வேலையில்லா திண்டாட்டம் இரண்டு மடங்காக (1.7 கோடி) அதிகரித்துள்ளது. அதாவது வேலை இல்லாமல் இருப்பவர்களில் ஓராண்டுக்கும் மேலாக வேலை இல்லாதவர்கள் 35.3 சதவீதம் பேர் உள்ளனர்.
இது சர்வதேச நிதிநெருக்கடி தொடங்கிய 2007-ல் 27 சதவீதமாக இருந்தது. அதிகபட்சமாக ஐஸ்லாந்தில் ஓராண்டுக்கும் மேல் (நீண்டகால) வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 238 சதவீதமும், அமெரிக்காவில் 167 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவ்விரு நாடுகளிலும் முறையே வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 18.2 சதவீதமாகவும், 26.5 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.