பிலிப்பைன்ஸில் ஹையான் புயலுக்கு 1,000 பேர் பலி
இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
வியத்நாமை நோக்கி நகர்ந்துள்ள இந்தப் புயல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 138 பேர் பலியானதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. ஆனால், பலி எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியதாக ரெட் கிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
லெய்டே தீவில் உள்ள டக்ளோபான் நகரில் ஹையான் புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. இதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் காரணமாகக் கடுமையான சூறைக் காற்று வீசியதால், லெய்டே தீவில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சார மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹையான் புயல் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 75 ஆயிரம் பேர் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் சேதம் மிகுதியாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
ஹையான் புயல் கரையைக் கடந்தபோது, இப்புயலின் மையப்பகுதியில் மணிக்கு 235 கி.மீ. வேகத்திலும், மேலே உந்தும் சக்தி மணிக்கு 275 கி.மீ. வேகத்திலும் வீசியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளிக்கு (4-ம் வகை) இணையானதாக ஹையான் புயல் கருதப்படுகிறது.
தெற்கு லெய்டே கவர்னர் ரோஜர் மெர்கடோ கூறுகையில், "புயல் தாக்கியபோது வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் நிலச்சரிவு ஏற்பட்டுச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் முழுவதும் பலத்த மழை பெய்தது" என்றார்.