கத்தார் ஓட்டல் வெடி விபத்தில் இறந்த 5 இந்தியர்களின் சடலத்தைக் கொண்டுவர நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கத்தார் ஓட்டல் வெடிவிபத்தில் இறந்த 5 இந்தியர்களின் சடலங்களை தாயகத்துக்கு அனுப்பிவைக்க அங்குள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கத்தார் தலைநகர் தோஹாவில் துருக்கியருக்குச் சொந்தமான ஒரு ஓட்டலில் வியாழக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டதில் 5 இந்தியர்கள் உள்ளிட்ட 11 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் கொல் லப்பட்டவர்களில் ரியாஸ் கிழகெம னோலில், அப்துல் சலீம் பலங்காத், ஜகாரியா படிஞ்சரே அனகண்டி, வெங்கடேஷ் மற்றும் ஷேக் பாபு ஆகிய 5 பேரும் இந்தியர்கள் என கத்தார் அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர, நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர்.

தூதரக நடவடிக்கை

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இந்தியர்களின் சடலங்களை அவர் களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக கத்தாருக்கான இந்திய தூதர் சஞ்சிவ் அரோரா தெரிவித்தார்.

கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலிபா அல தானி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

சிறப்புக் குழு அமைப்பு

இந்த விபத்தில் ஷாப்பிங் மாலுடன் இணைந்த அந்த ஓட்டல் கட்டிடம் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கத்தார் உள்துறை அமைச்சகம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

ஓட்டலின் மேற்கூரை மீது இருந்த காஸ் டேங்க் மற்றும் பக்கத்து கட்டிடத்தில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஓட்டல்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள காஸ் டேங்குகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள காஸ் டேங்குகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடுவது குறித்து அந்நாட்டு அரசு ஆய்வு செய்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE