திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவின் முன்னேற்பாடாக, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையில், உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது.
இவ்விழாவில் பங்கேற்ற கேரள முதல்வர் உம்மன்சாண்டி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அண்மையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, சென்னையில் நட்பு ரீதியாகச் சந்தித்து பேசினேன். அப்போது, இரு மாநில ஒற்றுமைக்கு பாடமாக இருக்கும் நவராத்திரி விழா பற்றியும் இருவரும் பேசினோம். இப்போது இந்த விழா பாதுகாப்புக்கு, தமிழக அரசு கூடுதலாக போலீஸாரை அனுப்பி இருப்பதிலும், இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்ததிலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நவராத்திரி விழா குறித்து, திருவனந்தபுரத்தில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் தலைமையில் ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். இந்த அரண்மனையை கேரள அரசு மிகவும் சிறப்பாகப் பராமரித்து வருகிறது. கேரளாவில் கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஜோசப், இந்த அரண்மனை மீது தனிக் கவனம் செலுத்திவருகிறார். அரண்மனையைப் புதுப்பிக்க ரூ.50 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குமரி மாவட்டம், நெய்யாறு நதி நீர்ப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறோம். முல்லைப்பெரியாறில் இப்போது வழங்கும் தண்ணீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும். அதில் சிறிதளவு கூட குறைக்க மாட்டோம். ஆனால், அணையின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அணையைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை என்பதால், அணையின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பத்மநாபபுரம் அரண்மனையை புராதன மையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் முதல்வர் உம்மன் சாண்டி.
முன்னதாக, பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த விழாவில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி முன்னிலையில், கேரள தொல்லியல் துறை இயக்குநர் பிரேம்குமார், உடைவாளை எடுத்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் சிவக்குமாரிடம் கொடுத்தார். அதை அவர், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரனிடம் கொடுத்தார். பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி சிலைகள் செண்டை மேளம், பக்தி கோஷம் முழங்க, திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
'மத்தியில் திடமான பிரதமர் இல்லை'
கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு உரியது. இன்னும், 900 ஆண்டுகள் தமிழகத்துக்குச் சொந்தமானது. அணையின் பாதுகாப்புக்கு நாம்தான் பொறுப்பு. மத்தியில் திடமான பிரதமர் இல்லாததால்தான், இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. துணிச்சல்மிக்க பிரதமர் வரும்போது, இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.