தவறினால், சர்வதேச விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையத்தை பிரிட்டன் அணுகும் என்றார். ஆனால், அவரது கோரிக்கையை உடனடியாக நிராகரித்தது இலங்கை அரசு.
காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த டேவிட் கேமரூன், இறுதிக்கட்டப் போரின்போது உருக்குலைந்த யாழ்ப்பாணம் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கொழும்பு திரும்பிய டேவிட் கேமரூன், வெள்ளிக்கிழமை இரவு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார். 1948ல் பிரிட்டனில் இருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு யாழ்ப்பாணம் சென்ற முதல் வெளிநாட்டு பிரதமர் டேவிட் கேமரூன்தான்.
டேவிட் கேமரூனும் ராஜபக்சே வும் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள், சமரச முயற்சிகள் பற்றி மனம் திறந்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நிருபர்களுக்கு கொழும்பில் சனிக்கிழமை டேவிட் கேமரூன் பேட்டி அளித்தார். (விடுதலைப்புலிகளுக்கு எதிரான) இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத்தன்மை கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார் டேவிட் கேமரூன்.
'விசாரணைக்கு ஏன் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும்?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'போர் பாதிப்புகளிலிருந்து முழுமையாக நாடு மீளவில்லை என்பதால் கால அவகாசம் தேவை' என அதிபர் கேட்டுக்கொண்டதால் அதை புரிந்துகொண்டு இந்த அவகாசம் தரப்பட்டது என்றார் கேமரூன்.
போரின்போது தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என வரவழைத்து பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாம்களில் என்ன நடந்தது என்பதை அறிய சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.
'கடினமான சில கேள்விகளை ராஜபக்சேயிடம் கேட்கப்போவதாக சொல்லியிருந்தீர்களே, அந்த கேள்விகளை எழுப்பினீர்களா?' என்று கேட்டதற்கு 'இருவரும் மனம் திறந்து பேசினோம், நான் சொன்ன அனைத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்று சொல்ல முடியாது' என்றார் கேமரூன்.
தமிழர்கள் கண்ணியம், மரியாதையுடன் வாழ வழி செய்யுங்கள், பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள், மனித உரிமை மீறல் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என நான் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். தமிழர்களிடம் நிலவும் பகைமை உணர்வை நல்லுறவாக மாற்றி நல்லிணக்கம் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ராஜபக்சேவிடம் தெரிவித்தேன் என்றார் டேவிட் கேமரூன்.
யாழ்ப்பாணத்துக்கு சில சர்வதேச அமைப்புகளுடன் நான் சென்றதற்கு காரணம், அங்கு நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவங்களை வெளிச்சம் போட்டு உலகுக்கு காட்டுவதற்குத்தான். காமன்வெல்த் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் இதை செய்தேன், இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கு நன்றி என்றார்.
உதயம் நாளேட்டின் அலுவலகத்துக்கு சென்றதையும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண முதல்வர் சி.எஸ்.விக்னேஸ்வரனுடன் நடத்திய சந்திப்பு திருப்தியாக இருந்தது. எனது இந்த பயணத்தின் நோக்கம் அந்த மக்களுக்கு உலகத்தின் ஆதரவு குரலை தெரிவிப்பதாகும். எனினும் விடுதலைப் புலிகள் திரும்புவதை யாரும் விரும்பவில்லை என்றார்.
'உங்களை சந்தித்த யாழ்ப்பாண மாகாண மக்கள் மீது இலங்கை வஞ்சகம் காட்டாது என்பது என்ன நிச்சயம்?' என்று கேட்டதற்கு 'இலங்கை அரசின் செயலை உலகம் கண்காணிக்கிறது' என்று குறிப்பிட்டார்.
கோரிக்கையை நிராகரித்தது இலங்கை...
இலங்கை அமைச்சர்கள் ஹிமல் சிரிபாலா டி சில்வா, கெகலியா ரம்புகவெல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகிய மூவரும் சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
'உலக நாடுகளின் காவலனாக (போலீஸ்) காமன்வெல்த் இருக்க முடியாது. கேமரூனின் பேட்டியை நாங்களும் கேட்டோம். தங்களது கருத்தை எந்த நாடும் எங்கள் மீது திணிக்கமுடியாது. ஏகாதிபத்தியத்தின் சுவடுகளை (பிரிட்டனை மறைமுகமாக குறிப்பிட்டு) துடைத்தெறிந்தவர்கள் நாங்கள். மீண்டும் அந்த நாடு இலங்கையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம். சர்வதேச விசாரணையை எதிர்ப்போம்.
சர்வதேச விசாரணை கோர எந்தவித காரணமும் இல்லை. குறுகிய காலத்தில் நாங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இலங்கைக்குள்ளேயே விசாரணை நடத்தி உரியவகையில் அதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல், பரிந்துரைகளை நடத்தி முடித்துள்ளோம். இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.
டேவிட் கேமரூனை யாழ்ப்பாணம் மக்கள் சந்தித்ததால் அவர்கள் பத்திரமாக இருப்பார்களா என்று கேட்டதற்கு 'பத்திரமாக இருப்பார்கள், யாரையும் தண்டிக்க மாட்டோம், எங்கள் கலாச்சாரம் அதை அனுமதிக்காது' என்றார் ரம்புகவெல்லா.