கண்ணைப் பார்; அறி - அமெரிக்காவுக்கு அம்ஜத் அலி கான் அறிவுரை

அமெரிக்காவுக்கு வரும் வெளி நாட்டவர்களை, இன வெறிப்பார்வையோடு பார்ப்பதை அமெரிக்க அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அமெரிக்காவுக்கு வருபவர்களின் கண்களைப் பார்த்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் பேசினாலே, வந்திருப்பவர் பயங்கரவாதியா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பாதிப் பிரச்சினையைத் தவிர்க்க முடியும்.

ஆனால், அதிகாரிகள் ஆள்களைப் பார்த்துப் பேசுவதற்குப் பதில், விமான நிலையத்திலுள்ள கணினியைப் பார்த்தோ, பெயரைப் பார்த்தோ முடிவு செய்கின்றனர்.

எனக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதுண்டு. கான் என முடியும் என் பெயரைப் பார்த்து, அதிகாரிகள் என்னிடம் இனவெறியோடு சோதனை நடத்தியதுண்டு. நான் மனிதவெடிகுண்டோ, அல்லது எந்த நாட்டுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவனோ அல்ல.

அமெரிக்க அதிகாரிகளுக்கு விமானப்பயணியின் பெயர் இஸ்லாமியப் பெயராக இருந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது தெரிவதில்லை.அமெரிக்க குடியுரிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, சந்தேகத்துக்குரிய பயணியின் முழுப் பின்னணியையும் தேடி அறிந்து கொள்ள இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், தனி அறையில் பயணிகள் சிறைவைக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE