மைக்ரோசாஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் பதவிவிலக நெருக்குதல்
38 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸுக்கு இப்போது இப்புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவனத்தின் பங்கு விலையை உயர்த்துவதற்காகவும் புதிய கண்டுபிடிப்புகளைக் உருவாக்கு வதிலும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மருக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டது.
இப்போது இந்த நெருக்கடி பில்கேட்ஸுக்கு வந்திருக்கிறது. இருப்பினும் 3 முதலீட்டாளர்களின் கருத்து குறித்து மைக்ரோசாஃப்ட் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்க மருத்துவிட்டார்.
இந்த மூன்று முதலீட்டாளர்களிடமும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் உள்ளன. எனவே மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுமம் இவர்களது பேச்சைக் கேட்டு செயல்படுத்துவதற்கான சமிக்ஞைகள் எதுவும் தென்படவில்லை என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த மூன்று முதலீட்டாளர்களும் தங்களைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கேட்ஸுக்கு 4.5% பங்குகள் உள்ளன. நிறுவனத்தின் மொத்த மதிப்பு 27,700 கோடி டாலராகும். நிறுவனத்தின் தலைவராக கேட்ஸ் இருப்பதால் அவர் நிறுவனத்தில் புதிய உத்திகள் வகுப்பதற்கு தடையாக இருப்பதாகவும் புதிதாக தலைமை செயல் அதிகாரியாக வருபவரின் அதிகாரமும் இவரது வரம்புக்கு உள்பட்டிருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பால்மருக்கு அடுத்தபடியாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள கேட்ஸின் பங்களிப்பு என்ன? என்று அவர்கள் கேள்வியெழுப்பினர். மேலும் இப்போதெல்லாம் தனது பெரும்பாலான நேரத்தை கேட்ஸ் தன்னார்வ தொண்டு செயல்களில் செலுத்தி வருவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 1986-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு முன்பு கேட்ஸ் வசம் 49 சதவீத பங்குகள் இருந்தன.