வலுக்கும் படகு மக்கள் நெருக்கடி விவகாரம்: மியான்மரில் பவுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

By ராய்ட்டர்ஸ்

மியான்மரின் யாங்கூன் நகரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மியான்மர் அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது என்ற மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை எதிர்த்து 30 பவுத்த துறவிகள் உட்பட 300 பேர் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.

இவர்கள் ஐ.நா. அமைப்பு மற்றும் மேற்கத்திய ஊடகங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் பலர் மியன்மர் அடக்கு முறை காரணமாக நாட்டிலிருந்து தப்பி படகுகளில் தெற்காசிய பகுதியில் அண்டை நாடுகளுக்குச் செல்கின்றனர்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்து படகில் சட்டவிரோதமாக வந்து குடியேறியவர்கள் என்று அவர்கள் மீது கடும் அடக்குமுறை ஏவி விடப்படுவதாக மியான்மர் அரசு மற்றும் அங்குள்ள தீவிர பவுத்தர்கள் மீது மேற்கத்திய ஊடகங்கள் விமர்சனம் வைத்து வருகின்றன.

படகில் போதிய வசதிகள் இல்லாமல் உயிருக்குப் பயந்தும், பிழைப்பு தேடியும் இவர்கள் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சி மேற்கொள்கின்றனர்.

இதில் மலேசியா - தாய்லாந்து எல்லைப் பகுதியில் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கி பலர் அவதிப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தாய்லாந்து - மலேசிய எல்லைப்பகுதியில் கைவிடப்பட்ட பல ஆள்கடத்தல் கும்பல்களின் முகாம்களும் அங்கு சடலங்கள் பல புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மலேசியா ஆள்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் ஆள்கடத்தல் கும்பலுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்க படகுகளில் ஆட்களைக் கடத்தி வரும் கும்பல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் செல்வதும் நடந்து வருகிறது.

இவ்வாறு படகில் அகதிகளாக வருபவர்கள் பற்றி “படகு மக்கள் நெருக்கடி” (boat people crisis) என்று மேற்கத்திய ஊடகங்கள் மியான்மர் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதனை எதிர்த்தே இன்று மியான்மர் பவுத்தர்கள் யாங்கூனில் பேரணி நடத்தியுள்ளனர். படகில் அவ்வாறு தத்தளிப்பவர்கள், மீட்கப்படுபவர்கள் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வருபவர்களே, இவர்கள் தங்களுக்கு புகலிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களை ரோஹிங்கிய முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்கின்றனர், இதற்கு மியான்மர் அரசை குற்றம்சாட்டுவதா என்று ஆர்பாட்டத் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு குடியேறுபவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘மிருகங்கள்’ என்றும் வர்ணித்து கோஷங்களை இன்று அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இது குறித்து மியான்மர் தேசிய அமைப்பு ஒன்றின் தலைவரான தர் வார் என்பவர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “வங்கதேசத்திலிருந்து வரும் 'படகு மனிதர்களை' ஏற்கவேண்டும் என்று சர்வதேச நாடுகள் மியான்மருக்கு நெருக்கடி கொடுத்தால், நாங்கள் எங்கள் அரசை அதனை ஏற்கவேண்டாம் என்று வலியுறுத்துவோம்” என்றார்.

10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரில் ‘நிறவெறி’ காலக்கட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவருகிறது.

பவுத்த துறவி ஒருவர் இவர்களைப் பற்றி கூறும்போது, “வங்காள மக்கள் பவுத்தமதத்தை மதிக்காதவர்கள். எனவே அவர்கள் மியான்மர் குடிமக்கள் கிடையாது. அப்படித்தான் பார்க்க முடியும்" என்று கூறியதை வைத்தே ரோஹிங்கிய முஸ்லிம்கள் எந்த வகை அடக்குமுறையை அங்கு அனுபவித்து வருகிறார்கள் என்பது தெரியவருகிறது.

தாய்லாந்து அதிகாரிகள் ஆள்கடத்தல் கும்பல் மீது எடுக்கும் நடவடிக்கை காரணமாக ஆள்கடத்தல் கும்பல் தப்பிச் சென்றதால் சுமார் 2,500 புலம்பெயர்ந்தோர் இன்னமும் கடலில் தத்தளித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரில் மியான்மர் நாட்டு தூதரகம் முன்பு இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அமைப்பினர் சிலர் “ரோஹிங்கிய முஸ்லிம்களை காப்பாற்றுங்கள்” என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை காண்பித்து தங்கள் எதிர்ப்பை மியான்மர் அரசுக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னணி:

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் ரோஹிங்கிய மக்கள் ஆவர். இவர்கள் பேசும் மொழி ரோஹிங்கிய மொழி. இவர்கள் மியான்மர் மண்ணின் மைந்தர்கள் என்று கல்வியியாளர்கள் சிலரும், மற்ற வரலாற்றாசிரியர்கள் சிலர் இவர்களை வங்காளத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் கூறிகின்றனர்.

அதாவது மியான்மர், பர்மாவாக இருந்த போது பிரிட்டீஷ் ஆட்சியில் ரோஹிங்கிய மக்கள் குடியேறியவர்கள் என்று ஒருதரப்பினரும், 1948-ம் ஆண்டு பர்மா விடுதலையடைந்த பிறகு சிறிய அளவில் குடிபெயர்ந்தவர்கள் என்றும் மேலும் வங்கதேசம் தனிநாடாக 1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, உருவான பிறகு, சிறிதளவும் மியான்மரில் குடியேறியவர்கள் என்றும் பல்வேறு விதமாக இவர்களைப் பற்றி வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன.

ஆனால் பிரிட்டன் காலனியாதிக்கத்துக்கு முந்தைய காலக்கட்டங்களில் முஸ்லிம்கள் அங்கு வந்து குடியேறியது பற்றிய எண்ணிக்கை விவரங்கள் சரிவர இல்லை.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் மிகப்பெரிய இன மோதல் வெடித்ததாகவும் இந்த வன்முறைக்கு பலர் பலியானதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அப்போது முதல் மியான்மரின் ராக்கைன் பகுதி இன/மத ரீதியாக பிளவடைந்தது.

1982-ம் ஆண்டு ஜெனரல் நே வின் அரசு பர்மிய தேசிய சட்டத்தை கொண்டு வருகிறது. அதில் ரோஹிங்கியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.

சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். 2013 கணக்கெடுப்பின் படி 735,000 ரோஹிங்கியர்கள் மியான்மரில் இருந்து வருகின்றனர்.

சர்வதேச ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உலகிலேயே அடக்குமுறைக்கு கடுமையாக ஆளாகும் ஒரு சிறுபான்மைச் சமூகம் ரோஹிங்கியர்கள் என்று அறுதியிட்டுள்ளது

அடக்குமுறை எப்படியெனில் அவர்கள் மியான்மரின் ராக்கைன் பகுதியிலேயே உள்நாட்டு அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். பலர் அங்கிருந்து தப்பி மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, வங்கதேசம் என்று அடைக்கலம் நாடுகின்றனர்.

இதில் ஆட்கடத்தல் கும்பலின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு இவர்கள் இரையாவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

2012-ம் ஆண்டு ராக்கைனில் பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனையடுத்தே சர்வதேச நாடுகளின் பார்வை மியான்மர் மீது விழுந்தது.

மியான்மர் பவுத்த மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை ரோஹிங்கிய முஸ்லிம்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த வதந்தியினால் கலவரம் மூண்டது. 2012ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி மியான்மர் அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. ஆகஸ்ட் 22-ம் தேதி அரசு தரப்பு செய்திகளின் படி 88 பேர் கலவரத்தில் பலியானதாகவும் இதில் முஸ்லிம்கள் 57 பேரும், பவுத்தர்கள் 31 பேரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டது.

ஆனால் நிறைய வீடுகள், சுமார் 2500 வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன. சுமார் 90,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்கள் இருப்பிடம் விட்டு அகதிகளாக வெளியேற நேரிட்டது.

அதன் பிறகு அங்கே தொடர்ந்து பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் மூண்ட படியே இருந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்