பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா -1

By ஜி.எஸ்.எஸ்

பனாமா என்பது மரமா? மீன்களா? பட்டாம்பூச்சிகளா?

கால்வாயாலும் கசிந்த திடுக்கிடும் தகவல்களாலும் உலக தலைப்புச் செய்தி களில் தொடர்ந்து இடம் பிடித்த தேசத்தின் கதை.

‘பனாமா கால்வாய் தெரியும். மற்றபடி பனாமா என்று ஒரு நாடு இருக்கிறதா என்ன?’ என்று சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் தகவல்கள் கசிந்து உலகத் தலைவர்கள் உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்களை கிடுகிடுக்க வைத்தபோது ஒருவர் கேட்டார் ‘பனாமாவா? அது எங்கிருக்கிறது?’

பனாமா, அது அமைந்த இடம் காரண மாகவே தனிச்சிறப்பு பெற்ற ஒரு சிறிய நாடு.

பனாமா அமெரிக்க கண்டத்தில் இருக் கிறது. ‘வட அமெரிக்காவா? தென் அமெரிக்கா வா?’ என்று கேட்டால் இரண்டுக்கும் இடை யில் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அதன் தென்பகுதியில் பசிபிக் பெருங்கடல், வடக்கு எல்லையாக கரீபியன் தீவுகள். மேற்கில் கோஸ்டா ரிகா. வடகிழக்கில் கொலம்பியா.

பனாமாவின் தலைநகரின் பெயரைச் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள லாம். பனாமா சிட்டி. பனாமா மக்கள் அனை வருக்குமே தெரிந்த மொழி என்று ஸ்பானிஷை சொல்லலாம். காரணம் அது ஸ்பெயினின் வசம் தொடர்ந்து இருந்து வந்த நாடு.

பனாமாவுக்கு ஏன் அந்தப் பெயர்? மூன்று காரணங்களை வெவ்வேறு தரப்பினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ள ஒருவகை மரத்துக்கு ‘பனாமா ட்ரீ’ என்று பெயர். எனவே நாட்டுக்கும் அந்தப் பெயர் வந்து விட்டது. இந்த மரத்தின் தாவரவியல் பெயரை அறிந்து கொண்டுதான் தீருவேன் என்றால் அது ஸ்டெர்குலியா அபெடாலா என்பதை உச்சரித்து உங்கள் நாக்குக்குக் கஷ்டம் கொடுக்கலா ம்.

இரண்டாவது காரணம் இது. உள் ளூர்வாசிகளின் மொழிகளில் ஒன்றில் பனாமா என்றால் ‘பல பட்டாம்பூச்சிகள்’ என்று அர்த்தம். வெளிநாட்டினர் இங்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் பல பட்டாம்பூச்சி களைக் கண்டார்கள். உள்ளுர் வார்த்தை யையே தேசத்தின் பெயராக வைத்து விட்டனர்.

மூன்றாவது காரணமும் சொல்லப்படு கிறது. அந்தப் பகுதியின் ஒரு கடற்கரைக்கு பனாமா என்று பெயர். அதனால் நாட்டுக்கும் அந்தப் பெயரை வைத்து விட்டார்கள் ஸ்பானியர்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி. அந்தக் கடற்கரைக்கு ஏன் அந்தப் பெயர் என்று நீங்கள் தொடர்ந்து கேட்டால் இதோ பதில். அந்தப் பகுதியின் மொழியில் பனாமா என்றால் ‘எக்கச்சக்கமான மீன்’ என்று அர்த்தம்.

தொடக்கத்திலிருந்து பனாமாவில் இருந்து வந்த உள் ளூர்வாசிகள் குனா, சோகோ, குயாமி என்று பல இனங்களைச் சேர்ந்தவர்கள். 1502-ல் ரோடிர்கோ என்ற ஸ்பானியக் கடல்வழி கண்டுபிடிப்பாளர் பனாமாவைக் கண்டறிந்தார். ஒண்ட வந்த ஒட்டகம் கூடாரத்தையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. 1519-ல் பனாமா உள்ளிட்ட அந்தப் பகுதிகள் ஸ்பெயின் வசம் வந்தது.

1821-ல் பனாமா ஸ்பெயினிட மிருந்து சுதந்திரம் பெற்றது. கிரான் கொலம்பியா கூட்டமைப்பின் ஒரு பகுதியானது.

அதென்ன கிரான் கொலம்பியா? கிரேட் கொலம்பியா என்பதை ஸ்பானிஷ் மொழியில் கிரான் கொலம்பியா என்பார்கள்.

இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப் போம்.

காலப்போக்கில் ஸ்பெயினின் ஆளு கைக்கு உட்பட்ட காலனி நாடுகள் ஒவ்வொன்றாக சுதந்திரம் பெற்றன. ஆனால் பனாமாவில் சுதந்திர தாகம் அவ்வளவு சீக்கிரம் எழுந்ததாகத் தெரியவில்லை. காரணம் பிற பகுதிகளின் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான தகவல்கள்கூட பனாமாவை மிகவும் மெதுவாகவே சேர்ந்தன. கடல் வழியாகவே தகவல் தொடர்பு வந்தாக வேண்டுமென்ற நிலை.

என்றாலும் பிற நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்கு பனாமாவை ஒரு பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டன. 1797-ல் வெனிசுலாவில் ஸ்பெயினுக்கு எதிரான புரட்சி இயக்கம் நடைபெற்றது. அப்போது அந்த நாட்டின் ராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ மிராண்டா என்பவர். பிரிட்டன் தங்கள் பகுதிக்கு சுதந்திரம் கொடுத்தால் பதிலுக்கு பனாமா பகுதியில் அவர்கள் கால்வாய் வெட்டுவதற்கு தாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார்.

சைமன் பொலிவர் 1819 ஆகஸ்ட் 7 அன்று புரட்சியில் வெற்றி பெற்றவுடன் கொலம்பியாவை ஆட்சி செய்த ஸ்பானிய வைஸ்ராய் பனாமாவுக்குச் சென்றார். 1821 வரை அங்கு ஆட்சி செய்தார். பின்னர் கர்னல் எட்வின் ஃபப்ரேகா என்பவரின் பொறுப்பில் பனாமா வந்தபோது, சுதந்திரப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

பனாமாவின் தற்போதைய தலைநகரான பனாமா சிட்டி இதுகுறித்து ஆற அமர திட்டமிட்டது. ஆனால் அதற்குள் பனாமாவைச் சேர்ந்த மற்றொரு நகரமான லாஸ் சாண்டோஸ் தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே அறிவித்து விட்டது. இதை அங்கீகரிக்கும் வகையில் பனாமா சிட்டியில் நவம்பர் 28, 1821 அன்று ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 28 பனாமாவின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

(உலகம் உருளும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

26 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

5 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்