ஸ்னோடெனுக்கு தஞ்சம் அளிக்க ஜெர்மனி மறுப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஊழியர் ஸ்னோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க ஜெர்மனி அரசு மறுத்துவிட்டது. அவருக்கு விசா வழங்க இயலாது என்றும் அந்நாட்டு அரசு கூறிவிட்டது.

பிற நாடுகளில் இணையம் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உளவு பார்த்து வரும் தகவலை ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். அரசின் ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக ஸ்னோடென் மீது அமெரிக்கா வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா விலிருந்து கடந்த மே மாதம் தப்பிச் சென்ற ஸ்னோடென், ஹாங்காங் வழியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். அங்கு ஓராண்டுக்கு தங்கிக் கொள்ள ரஷ்யா அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை அமெரிக்கா உளவு பார்த்தது தொடர்பான தகவல்களை ஜெர்மனிக்கு வந்து நேரில் தர விரும்புவதாக அந்நாட்டு அரசுக்கு ஸ்னோடென் கடிதம் எழுதியிருந்தார். ஸ்னோடெனை சமீபத்தில் சந்தித்த ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ரோபேல், அந்த கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்தார்.

ஸ்னோடெனின் இக்கடிதம் குறித்து ஜெர்மனி நாடாளுமன்ற உளவுக் குழு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது. இக்குழுவின் தலைவர் தாமஸ் ஊப்பர்மேன் கூறுகையி்ல், “ஸ்னோடெனை ஜெர்மனிக்கு அழைத்து, அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. அவர் ஜெர்மனி வந்தால், அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதே இதற்கு காரணம் (ஸ்னோடென் ஜெர்மனி வந்தால், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது).

எனவே, மாஸ்கோவுக்கு சென்று அவரிடம் விசாரிப்பது தொடர்பான வாய்ப்புகளை ஆராயுமாறு அரசை கேட்டுக்கொணடுள்ளோம்” என்றார்.

தஞ்சம் அளிக்க மறுப்பு

இந்த விவகாரம் தொடர்பாக ஜெர்மனி உள்துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டர் பிரீட்ரிச் வியாழக்கிழமை கூறியதாவது:

“ஸ்னோடெனுக்கு அரசியல் தஞ்சம் பெறக்கூடிய தகுதி இல்லை. அவர் அரசியல் ரீதியாக துன்புறுத்தல் எதையும் சந்திக்கவில்லை. அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகள் குறித்து மேலும் பல தகவல்களை அறிய, மாஸ்கோவில் இருக்கும் ஸ்னோடெனிடம் விசாரணை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

எம்.பி. விமர்சனம்

அரசின் இந்த முடிவு அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ரோபேல் தெரிவித்தார். அவர் கூறுகையில், “அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவுச் செயல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் ஜெர்மனிக்கு ஸ்னோடென் மிகப்பெரிய சேவையை செய்துள்ளார்.

ஸ்னோடெனை அமெரிக்கா வசம் ஒப்படைக்காமல் இருக்க ஜெர்மனி அரசால் முடியும். அரசு விரும்பினால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடலாம்” என்றார்.

பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடலை அமெரிக்க உளவுத் துறை ஒட்டுக் கேட்டதாக வெளியான தகவலால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளிப்பதன் மூலம், இரு நாடுகளின் உறவு மேலும் பாதிக்கும் என ஜெர்மனி அரசு கருதுகிறது. அதனால்தான், அவருக்கு தஞ்சம் அளிக்க மறுத்து விட்டது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒன்றையொன்று உளவு பார்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. - பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்