ஒரு மாதத்தில் 1,350 கோடி தகவல்கள் திருட்டு - இந்தியாவை உளவு பார்த்த அமெரிக்கா
உலக நாடுகளை அமெரிக்கா பல ஆண்டுகளாக வேவு பார்த்து வருவதை அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) முன்னாள் ஊழியர் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை என்.எஸ்.ஏ. அதிகமாக உளவு பார்த்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் வட்டாரத்தில் இருந்தாலும் இந்தியாவின் நடவடிக்கைகளையும் என்.எஸ்.ஏ. உன்னிப்பாகக் கண்காணித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பல்வேறு தரப்பினரின் இ-மெயில், வீடியோ பகிர்வு, ஆன்லைன் சேட்டிங், ஆன்லைன் உரையாடல்களில் இருந்து பல கோடி தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. குறிப்பாக, இந்திய அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சிகள், அணுசக்தி திட்டங்கள், பொருளாதாரக் கொள்கை முடிவுகள் குறித்த விவரங்கள் களவாடப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்காகவே சில நாடுகளை உளவு பார்த்ததாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால், இந்தியா தொடர்பாக அமெரிக்கா திரட்டிய தகவல்கள் பயங்கரவாதத்துக்கு ஒருதுளிகூட தொடர்பில்லாதவை.
இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகளின் தொலைபேசி உரையாடல்கள், இ-மெயில் தகவல் பரிமாற்றங்கள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு என்.எஸ்.ஏ. ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய உளவு அமைப்பான "ரா"-வின் தகவல் பரிமாற்றங்களும் ஒட்டு கேட்கப்பட்டு தனி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் ஒரு மாதத்துக்குள் இந்தியாவில் இருந்து 1,350 கோடி ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. ஸ்னோடென் வசமுள்ள ரகசிய ஆவணங்களில் இருந்தும் மத்திய அரசின் உளவு வட்டாரங்களில் இருந்தும் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இருந்து பல்வேறு தரப்பினரின் இ-மெயில், வீடியோ பகிர்வு, ஆன்லைன் சேட்டிங், ஆன்லைன் உரையாடல்களில் இருந்து பல கோடி தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.