மேலும் சில ரகசிய தகவல்களை வெளியிட அசாஞ்சே முடிவு

மேலும் சில ரகசிய தகவல்களை வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டவர் விக்கிலீக்ஸ் இணைய தள நிறு வனர் ஜூலியன் அசாஞ்சே. தற்போது பிரிட்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.

தூதரகத்தை விட்டு வெளி யேற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில ரகசிய தகவல்களை வெளியிடப்போவதாக அசாஞ்சே கூறியுள்ளார். ஈகுவேடார் தூதரகத்தில் உள்ள அசாஞ்சே, இணையத்தின் காணொலி (வீடியோ) காட்சி மூலம் பொது மக்களிடம் கலந்துரையாடினார். இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த 3,500 பேர் பங்கேற்றனர்.

இணையம் வழியாக தகவல்களை சேகரித்து வேவு பார்க்கும் அரசு, இதழியல், உக்ரைனில் இப்போது ஏற் பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அசாஞ்சே பேசினார்.

அவர் பேசுகையில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் வேவு பார்க்கும் நடவடிக்கை தொடர்பாக எட்வர்டு ஸ்னோடென் ரகசிய தகவல்கள் வெளியிட்டதை அந்நாட்டின் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று எங்களுக்கு தெரியும். சிலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். சிலர் மீது நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்போது மனித சமுதாயத்தில் இணையம் இரண்டறக் கலந்து விட்டது. இணையம் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்த சட்டங்களாகிவிட்டன. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை, இணையம் வழியாக தகவல்களை சேகரித்து உளவு பார்த்ததை, ராணுவ ரீதியான ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE