முன்னொரு காலத்தில் குவைத் என்னும் தேசமானது, தன்னிடம் எண்ணெய் வாங்கும் தேசங்களுக்கு அபாரமான விலைக் குறைப்பு செய்தது. அதாவது பக்கத்து தேசமான இராக் விற்கிற விலையைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்த விலை. இதில் காண்டு பிடித்துத்தான் அப்போதைய இராக்கிய அதிபராக இருந்த சதாம் ஹுசைன் குவைத்தைத் தனது இன்னொரு மாநிலம் என்று அறிவித்து ஓர் அதகள யுத்தத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்தப் பழைய சரித்திரம் இப்போது மீண்டும் திரும்புவதற்கான அபாய சாத்தியங்கள் அந்தப் பக்கம் உற்பத்தியாகத் தொடங்கி யிருக்கின்றன. அதே இராக்தான். ஆனால் குவைத்துக்குப் பதிலாகக் குர்திஸ்தான்.
இந்த குர்திஸ்தான் என்பது தனி தேசமல்ல. ஒரே தேசமும் அல்ல. இரான், இராக், சிரியா, துருக்கி என்கிற நான்கு தேசங்கள் இணையும் இடத்தில் வசிக்கும் குர்த் இன மக்களின் மண். இதை குர்திஸ்தான் என்ற பேரில் தனிநாடாகப் பட்டா பண்ணிக் கொடுக்கச்சொல்லி ரொம்ப காலமாக அவர்கள் போராடி வந்தாலும் நாளது தேதி வரைக்கும் மேற்படி நாலு தேசங்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் அது இருக்கிறது. தேசத்துக்கொரு நீதி. சட்ட திட்டங்கள். அந்தந்த ஊர்ப் பிரச்னைகள். ஒரே இனமாக இருந்தும் நாலு தேசிய அடையாளங்களோடு இருக்கி றோமே என்று அவர்கள் சரித்திரக் கவலைப் பட்டுக்கொண்டிருப்பது பற்றிப் பிறகொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
இப்போதைய கவலை, இராக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் குர்திஸ்தான் பிராந்தியத்துக்கு வந்திருக்கிற சிக்கல்தான். ஏனெனில், இந்த இடத்தின் எண்ணெய் வளமென்பது ரொம்பப் பெரிது. உலகின் ஆறாவது பெரிய உற்பத்தி ஸ்தானம்.
இராக்கிய குர்திஸ்தான் மக்கள் வருஷக்கணக்கில் போராடி, சண்டை போட்டு ஒரு மாதிரி வரையறுக்கப்பட்ட மாநில சுயாட்சி உரிமை வாங்கிக்கொண்டு இப்போது இராக்கின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் தனியொரு கொடி கொண்ட பகுதியினராக உள்ளனர். அதற்குத் தனி ராணுவமெல்லாம்கூட உண்டு. ஆனால் எண்ணெய் வளத்தில் பதினேழு பர்சண்ட் தான் ஷேர். இதில் மட்டும் தனியாவர்த்தனம் கூடாது என்பது நிபந்தனை. அதாவது எண்ணெய்க் காசில் ஷேர் உண்டு. ஆனால் விற்பனை எல்லாம் மத்திய அரசு திட்டப்படிதான்.
இதில்தான் இப்போது சிக்கல். குர்திஸ்தான் தன்னிச்சையாக துருக்கியுடன் ஒரு அக்ரிமெண்ட் போட்டு ஏற்றுமதியை ஆரம்பித்தது. இது சட்டவிரோதம் என்று இராக் அலறத் தொடங்கியிருக்கிறது. சுயாட்சிப் பிராந்தியமே என்றாலும் இராக்கின் கட்டுப்பாட்டில் இருக்கிற மாநிலம் அல்லவா? இதெல்லாம் அத்துமீறல் என்கிறார் அதிபர் நூரி அல் மாலிக்கி. குர்திஸ்தானின் சுக சௌகரியங்களில் கைவைக்க நேரிடும் என்று மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
வெண்ணெய், நீ ஒரு அமெரிக்க பொம்மை. சட்டம் பேச உனக்கென்ன யோக்கியதை? உன் பைப் லைன் இல்லாவிட்டால் எனக்கு ஊர் முழுக்க சரக்கு லாரி இருக்கிறது. உன்னால் என்ன செய்ய முடியும் பார்க்கலாம் என்று குர்திஸ்தான் அரசு ஏற்றுமதியை ஆரம்பித்துவிட்டது. இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். எண்ணெய் என்பது எளிதில் தீப்பிடிக்கும் சங்கதி என்பதால் விரைவில் இந்த விவகாரம் பெரிதாவதற்கான சாத்தியங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
அல் காயிதாவினரை அடக்கப் படையனுப்ப மாட்டேன் என்று நல்ல பிள்ளை வேஷம் போடுகிற அமெரிக்கா, குர்திஸ்தான் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கத்தான் போகிறோம்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago