தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தை நெல்சன் மண்டேலாவுக்காக 10 நாள் துக்கம் அனுசரிக்க அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வீட்டில் டிசம்பர் 5-ம் தேதி இரவு மண்டேலா காலமானார். அவரது உடல் தற்போது தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி கியூனு பகுதியில் உள்ள அவரது பூர்விக வீட்டில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இடைப்பட்ட பத்து நாள்களிலும் மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிபர் ஜேக்கப் ஜுமா, ஜோகன்னஸ்பர்க் நகரில் செய்தியாளர்களிடம் கூறியது:
மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டிசம்பர் 8-ம் தேதி தேசிய பிரார்த்தனை தினமாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம் தேவாலயங்கள், மசூதிகள், இந்து கோயில்கள் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
டிசம்பர் 9-ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 10-ம் தேதி ஜோகன்னஸ்பர்க் எப்என்பி விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
11 முதல் 13-ம் தேதி வரை பிரிட்டோரியாவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் மண்டேலாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
டிசம்பர் 15-ம் தேதி அவரது பிறந்த இடமான கியூனு பகுதியில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஜேக்கப் ஜுமா தெரிவித்தார்.
இறுதிச் சடங்கில் ஒபாமா, ஜார்ஜ் புஷ், கிளிண்டன்…
மண்டேலாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.
அதிபர் ஒபாமா தங்குவதற்காக ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ராடிசன் நட்சத்திர ஹோட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவுக்காக அந்த ஓட்டலின் 6 தளங்கள் ஒதுக்கப்பட்டு அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஒபாமா தங்கும் அறையின் ஜன்னல், கதவுகள் மாற்றப்பட்டு துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத புல்லட் புரூப் ஜன்னல், கதவுகள் பொருத்தப்படுகின்றன.
இதனிடையே, மண்டேலாவின் மனைவி கிரேசா மேச்சலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒபாமா, அவருக்கு ஆறுதல் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
லட்சக்கணக்கானோர் அஞ்சலி
தென்னாப்பிரிக்கா முழுவதும் மூலை முடுக்கெல்லாம் பெருந்திரளான மக்கள் கூடி மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரியத்தின்படி துக்க நடனம் ஆடி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா, நீதித்துறை தலைநகரான புளோம்போன்டின், சட்டம் இயற்றும் அமைப்புகளின் தலைநகரமான கேப்டவுன், நாட்டின் மிகப் பெரிய நகரான ஜோகன்னஸ்பர்க் மற்றும் சிறு குறு நகரங்களின் முக்கிய வீதிகளில் மண்டேலாவின் உருவப் படம் வைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மலர்க்கொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்தியர்கள் இறுதி மரியாதை
தென்னாப்பிரிக்க மக்கள் தொகையில் 2.5 சதவீதம் பேர் இந்தியர்கள். ஜோகன்னஸ்பர்க்கின் சாண்டோன் பகுதியில் இந்தியர்கள் கணிசமாக வசிக்கின்றனர். அங்குள்ள மண்டேலாவின் உருவச் சிலை முன்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவர்களில் சாந்தி பிள்ளை தனது குழந்தைகள் சுதேசன் (6), லோஷினியுடன் (10) வந்து மண்டேலாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கறுப்பின பெரும்பான்மை அரசு ஆட்சியைப் பிடித்த போது இந்தியர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. அப்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று ஆதரவுக் கரம் நீட்டியவர் மண்டேலா. அந்தத் தலைவரின் மறைவுக்கு எனது குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago