ஆசியா - ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி ரயில்வே சுரங்கப் பாதை: 150 ஆண்டு கனவை நனவாக்கியது துருக்கி
150 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியை ஆண்ட ஒட்டோமான் பேரரசர் சுல்தான் அப்துல் மஜித்தின் கனவுத் திட்டமான இந்த சுரங்கப்பாதையை துருக்கி அரசு இப்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடு துருக்கி. அந்த நாட்டின் ஐரோப்பிய பகுதியான ஹல்கலி நகரில் இருந்து ஆசியப் பகுதியான ஜெப்ஸிக்கு 76 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தப் பாதையில் போஸ்போரஸ் ஜலசந்தி கடற்பகுதியில் 16.6 கி.மீட்டர் தொலைவு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. மிகச் சவாலான இப் பணியை ஜப்பான்- துருக்கி கூட்டு நிறுவனமான தைஷி மேற்கொண்டது.
கடலில் 3 ரயில் நிலையங்கள்...
இதில், 1.4 கி.மீட்டர் தொலைவு கடலுக்கு அடியில் சுமார் 200 அடி ஆழத்தில் டியூப் வடிவிலான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டியூப் வடிவ சுரங்கப் பாதை ரயில்வே கட்டுமானத் துறையில் மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடலுக்குள் 3 ரயில் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் யனிகபி ரயில் நிலையம் இத்தாலியின் வர்த்தக நகரமான இஸ்தான்புல் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ. 25,387 கோடி மதிப்பிலான இந்த ரயில்வே திட்டம் அண்மையில் நிறைவு பெற்றது. நவீன துருக்கியின் 90-வது ஆண்டு தினமான செவ்வாய்க்கிழமை புதிய சுரங்கப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த நாட்டு பிரதமர் ரிசெப் தயீப் எர்டோகன் ரயிலை இயக்கி போக்குவரத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுரங்கப்பாதை ரயில் சேவை மூலம் நாளொன்றுக்கு 15 லட்சம் பயணிகள் பயன்பெறுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பூகம்ப ஆபத்து?
பூகம்பம் ஏற்படும்போது பயணிகளுக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இதனை துருக்கி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 9 ரிக்டர் அலகுக்கு அதிகமான பூகம்பத்தைத் தாங்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் ரயில்வே சுரங்கப் பாதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துருக்கி அரசுத் துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.