காமன்வெல்த் மாநாடு: இலங்கைப் பகுதிகளை பார்வையிட கேமரூன் முடிவு
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் போரிட்ட பகுதிகளை இந்த பயணத்தின்போது சென்று பார்வையிட உள்ளார்.
புலிகளுக்கு எதிராக சண்டை நடந்த தமிழர் பெரும்பான்மை மிக்க வடக்குப் பகுதிக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுப் பிரதமர் கேமரூன்தான்.
போரின்போது அப்பாவி மக்கள், விடுதலைப்புலிகளை கொடூரமாக நடத்தி இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாக கூறப்படும் புகார்களை காமன்வெல்த் மாநாட்டில் தயவு தாட்சயண்மின்றி எழுப்ப உறுதியாக இருப்பதாக பிரதமர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
போரால் பாதிப்புக்குள்ளான தமிழர்களின் வடக்கு பகுதிக்குச் சென்று, நிலைமையை நேரில் பார்வையிடவும், அவர்களிடம் கேட்டறியவும் அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என நான் எடுத்த முடிவு சரியானதே. போரின்போது நடந்த மனித உரிமை மீிறல்கள், பிற அத்து மீறல்கள் பற்றி தயவு தாட்சண்யமின்றி இலங்கை அரசிடம் கேள்வு எழுப்ப தயங்கப் போவதில்லை.
விடுதலைப் புலிகளுடனான சண்டைக்குப் பிறகு செய்திருக்க வேண்டிய சில பணிகளை அவர்கள் செய்யத் தவறிவிட்டனர். இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இது பற்றி இலங்கை அரசிடம் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். தமிழர் வாழும் வடக்குப் பகுதிக்கு இந்த பயணத்தின்போது சென்று பார்வையிடுவேன் என்றார்.
நிருபர்களுக்கு டேவிட் கேமரூன் பேட்டி அளித்தபோது மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூச்சியும் உடன் இருந்தார்.
லண்டனில் இந்த வாரத்தில் நடந்த இந்த பேட்டி தொடர்பான செய்தி அறிக்கை கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மூலமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. 1948ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தது இலங்கை. அதன் பிறகு யாழ்ப்பாணத்துக்கு வரும் முதல் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன்தான் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.