26 பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல் சிறைகளில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் பாலஸ்தீனர்களில், 26 பேரை இஸ்ரேல் நேற்று முன்தினம் விடுதலை செய்தது.

இவர்கள் அனைவரும் இஸ்ரேலியர்கள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள். 1993ல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் கைது செய்யப்பட்ட இவர்கள், 19 முதல் 28 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நிர்பந்தத்தின் பேரில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த ஜூலை மாதம் மீண்டும் தொடங்கியது. இதில் நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாக இஸ்ரேல் சிறைகளில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் 104 பாலஸ்தீனர்களை 4 கட்டங்களாக விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இதில் முதல் 2 கட்டங்களாக ஆகஸ்ட் 13 மற்றும் அக்டோபர் 30ம் தேதிகளில் பலர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 3வது கட்டமாக 26 பேரை திங்கள்கிழமை மாலை விடுதலை செய்தது இஸ்ரேல். இவர்களில் 18 பேர் சிறையிலிருந்து பஸ் மூலம் மேற்கு கரை, ரமல்லா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 பேர் கிழக்கு ஜெருசலேத்துக்கும், 3 பேர் காசா பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சொந்த ஊரில் வரவேற்பு

தங்கள் சொந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்த இவர்களுக்கு உறவினர்களும் அரசு அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விடுதலைப் போராட்ட தியாகியாக வர்ணித்து கொண்டாடி மகிழ்ந்தனர். விடுதலை செய்யப்பட்ட பலர், மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் கல்லறையில் மலர்களை வைத்து வணங்கினர்.

விடுதலை செய்யப்பட்டவர்களை சந்திப்பதற்காக, பாலஸ்தீன நிர்வாகப் பகுதி அதிபர் மகமுது அப்பாஸ், ரமல்லா நகரில் உள்ள தலைமை அலுவல கத்தில் திங்கள்கிழமை இரவு காத்திருந்தார்.

“நம் நாட்டுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவது இது கடைசி முறையாக இருக் காது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைத்து பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படும் வரை அந்நாட்டுடன் அமைதி உடன்பாடு செய்துகொள்ள மாட்டோம்” என்றார் மகமுது அப்பாஸ்.

இதனிடையே பாலஸ்தீனர் களின் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உறவினர்கள், இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் ஜெருசலேத்தில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் வீட்டில் இருந்து, பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்ட சிறைகளில் ஒன்றினை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

முன்னதாக இவர்கள், பாலஸ் தீனர் விடுதலைக்கு எதிராக இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இம்மனுவை நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார். உள்ளூர் அரசியல் நெருக்குதல் காரணமாக, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிவிப்பை நெதன்யாகு வெளியிட்டுள்ளார். “சுலபமாக முடிவுகள் எடுப்பதற்காக நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை” என்றார் நெதன்யாகு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE