ரஷ்யாவின் சேவ்மாஷ் கப்பல் கட்டுமானத் தளத்தில் நடந்த விழாவில் போர்க்கப்பலில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய தேசிய கொடி உரிய மரியாதையுடன் இறக்கப்பட்டு, இந்திய தேசிய கொடி கம்பீரமாக ஏற்றப்பட்டது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, ரஷ்ய துணை பிரதமர் திமித்ரி ரோகோஜின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்திய பாரம்பரியபடி தேங்காய் உடைக்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இரண்டு மாத கடல் பயணத்துக்குப் பின்னர் கர்நாடகத்தின் கார்வார் கடற்படைத் தளத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.14,483 கோடி செலவு...
ரஷ்யாவில் ரூ.14,483 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கப்பல் 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளம் 60 மீட்டர் உயரம் உடையது. அதாவது சுமார் 20 மாடிகள் உயரத்துக்குச் சமம்.
கப்பலின் மேற்பரப்பில் ஒரே நேரத்தில் 24 மிக் ரக போர் விமானங்களையும் 10 ஹெலிகாப்டர்களையும் நிறுத்தும் வசதி உள்ளது. 8000 டன்னுக்கும் அதிகமான எடையைத் தாங்கும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல், ஒரே நாளில் 13,000 கி.மீட்டர் தொலைவு பயணம் செய்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
போர்க்கப்பலில் மொத்தம் 1,600 பேர் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ஒரு லட்சம் முட்டைகளும் 2 லட்சம் லிட்டர் பாலும் 16 டன் எடை அரிசியும் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எரிபொருள், உணவு, தண்ணீ ருக்காக கடற்படைத் தளத்துக்கு திரும்பாமல் சுமார் 45 நாள்கள் வரை கடலிலேயே சுற்றும் வகையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் உள்ளன.
அட்மிரல் கோர்ஷ்கோவ்- ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா
ரஷ்யாவில் அட்மிரல் கோர்ஷ்கோவ் என்று பெயரிடப்பட்ட இந்த போர்க்கப்பல் இந்திய ராணுவ தேவைகளுக்கு ஏற்ப மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது 60 சதவீத புதிய போர் தளவாடங்களுடன் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் பிரமாண்ட போர்க்கப்பல் உருவாகியுள்ளது.
இந்தப் போர்க்கப்பலுக்கான ஒப்பந்தம் 2004-ம் ஆண்டே ஏற்படுத்தப்பட்டு 2008-ல் இந்தியா விடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு இழுபறி களுக்குப் பின்னர் இப்போது இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே ஐ.என்.எஸ். விராட் விமானந்தாங்கி போர்க்கப்பல் உள்ளது.
தற்போது 2-வது விமானந் தாங்கி போர்க்கப்பலாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கடற்படையில் இணைந்துள்ளது. இதில் இஸ்ரேலின் பாரக் ரக ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.
அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்களை கொண்டுள்ள நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலை 2018-19-ல் இந்திய கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.