மலாலாவின் சுயசரிதை நாளை வெளியாகிறது

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டதில் காயம் அடைந்து உயிர் பிழைத்துள்ள மலாலா யூசுப்சாயின் சுயசரிதை செவ்வாய்க்கிழமை வெளியாகிறது. அதில் உள்ள முக்கிய விவரங்களை தி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

‘நான்தான் மலாலா: தலிபான்களால் சுடப்பட்ட பெண்’ என்ற தலைப்பில் சுயசரிதை வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மலாலா (16). தனது பகுதியில் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்த பெண்களிடம் படிப்பபின் அருமை பற்றி எடுத்துக் கூறி கல்விப் பணியாற்றியவர். பெண்கள் படிப்பதை விரும்பாத தலிபான்கள் மலாலா மீது வெகுண்டெழுந்தனர்.

வகுப்பு முடிந்து பள்ளிக் கூடத்திலிருந்து பஸ்ஸில் மலாலாவும் அவரது வகுப்பறைத் தோழிகளும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தலிபான்கள் அந்த பஸ்ஸை மறித்தனர். பின்னர், மலாலா யார் எனக் கேட்டபடி துப்பாக்கியால் சுட்டனர். மலாலாவும் மற்றொரு பெண்ணும் காயம் அடைந்தனர். இது நடந்தது 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி.

காயம் அடைந்த மலாலா, முதலுதவிக்குப்பிறகு ராணுவத்தின் உதவியால் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகர மருத்துவமனைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். மலாலா நினைவு திரும்பி கண் விழித்தது அக்டோபர் 16ம் தேதி. அப்போது அந்த பெண், ‘நான் சாகாமல் இருக்கிறேன். இறைவா உனக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார். இதை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் மலாலா.

துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அக்டோபர் 16ம் தேதி நினைவு திரும்பி கண்விழித்தேன். தாக்குதல் சம்பவம் பற்றி நினைவுக்கு வரவில்லை. நான் எங்கிருக்கிறேன். யார் இங்கு கொண்டுவந்தது, எனது பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள். நான் பயத்தில் இருக்கிறேனா என்றெல்லாம் என பல்வேறு கேள்விகள் எழும்பி எனது நெஞ்சைத் துளைத்தன. எனக்கு அல்லா புதிய வாழ்வை கொடுத்துள்ளார் என்று மட்டும் புரிந்தது என்று மலாலா தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருககிறார்.

தலிபான்கள் தாக்குதல் நடத்தியபோது அதை நேரில் பார்த்த தோழிகள் அந்த சம்பவம் பற்றி தன்னிடம் விவரித்த தகவல்களை சுயசரிதையில் மலாலா வடித்துள்ளார்.

தாடி வைத்த ஒரு நபர் சாலையின் குறுக்கே பாய்ந்து, நாங்கள் வந்த வாகனத்தை வழிமறித்து டிரைவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் மற்றொரு நபரும் அவர் பின்புறமாக சேர்ந்துகொண்டார். தலையில் தொப்பி அணிந்துவந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தின் பின்புறம் வழியாக தாவி உள்ளே வந்து, மலாலா எங்கே என்று அதட்டலாக கேட்டார். வாகனத்தில் இருந்தவர்கள் வாய் திறக்காமல் இருந்தாலும் என் பக்கமாகவே பார்வையைத் திருப்பினர். அப்போது தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார். அதிர்ந்து போன அனைவரும் அலறல் சத்தம் போட்டனர். மூன்று முறை அந்த நபர் சுட்டுள்ளார். ஒரு குண்டு எனது இடது கன்னத்தில் பாய்ந்தது. ரத்தம் கொட்டிய நிலையில் நான் மற்றொரு பெண்ணின் பக்கமாக குனிந்தேன். இதனால் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த மற்ற 2 குண்டுகள் எனதருகே இருந்தவர்கள் பக்கமாக பாய்ந்தது என்று விவரித்துள்ளார்.

மலாலாவை மருத்துவமனையில் சேர்த்தது பாகிஸ்தானி ராணுவ டாக்டர். அவர்தான் அவசர சிகிச்சை கொடுத்து மேல் சிகிச்சைக்காக பர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக விமானத்தில் அனுப்பி வைத்தார்.

நான் பர்மிங்காமில் இருப்பதை சொன்னது மருத்துவமனையின் நர்ஸ். மற்ற விவரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. எனது பெயரையும் தெரிவிக்கவில்லை. உண்மையில் நான்தான் மலாலாவா? என்று சுயசரிதையில் வினவியுள்ளார்.

பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக மலாலா அரும்பாடுபட்டதற்காக அவரை கௌரவித்து ஜூலை 14ம் தேதியை உலக மலாலா தினமாக அறிவித்துள்ளது ஐநா. அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு கிடைக்குமா என்பது அக்டோபர் 11ம் தேதி தெரியும். இந்த பரிசுக்கு அவரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இப்போது மலாலா பிரிட்டனில் வசித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE