அமெரிக்க நிதிச்சுமையால் உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பு: ஐ.எம்.எப். எச்சரிக்கை

அமெரிக்க நிதிச்சுமைக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், அது உலக பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்) எச்சரித்துள்ளது.

இது குறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில், ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லகார்டே பேசும்போது, “பட்ஜெட் தொடர்பாக இப்போது அமெரிக்க அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை மற்றும் கடன் வாங்கும் அளவை அதிகரிப்பது எந்த வகையிலும் பயன்தராது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது மிகவும் மோசமான நடைமுறை.

மேலும், கடன் வழங்கும் அளவை அதிகரிப்பது என்பது அதைவிட மிகவும் மோசமானது. இத்தகைய நடவடிக்கையானது அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டும் பாதிக்காமல், சர்வதேச பொருளாதாரத்தையே பாதிக்கும். இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையானது மிகவும் மோசமானது. இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

பொருளாதார தேக்க நிலை நிலவும் சூழலில் இதற்கு விரைவாக அமெரிக்கா தீர்வு காண வேண்டும். இதற்காக சிறிய அளவில் இன்று சமாதானம் செய்து கொண்டு செயல்படுத்தலாம். பிறவற்றை நாளை செயல்படுத்தலாம்.

ஏற்கெனவே பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இதுபோன்ற செயல்பாடுகள் மீட்சிக்கு ஒருபோதும் உதவாது. மீண்டுவரும் பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். வருவாயை அதிகரித்து செலவைக் குறைக்கும் வழிமுறைகளை அமெரிக்க அரசு கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும்.

கடன் சுமையைக் குறைப்பதற்கு ஆக்கபூர்மான செயல்திட்டங்கள் மிகவும் அவசியம். ஜப்பான் இதை உறுதியாகச் செயல்படுத்துகிறது. தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 250 சதவீதத்தை அதாவது 90 ஆயிரம் டாலர் வரையான தொகையை ஒவ்வொரு தனிநபருக்கும் உள் கடன் தொகையாக அறிவித்துள்ளது.

வரி அளவை உயர்த்த அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும். மேலும் உரிமை வழங்கல் சீர்திருத்தை ஏற்றிருப்பது மற்றொரு சிறப்பம்சம். இதுபோன்ற கொள்கை முடிவு ஏதும் உருவாக்கப்படவில்லையெனில், எவ்வளவு லாபம் கிட்டினாலும் அது கரைந்து போய்விடும்.

பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த எடுக்கும் எத்தகைய நிதி சார்ந்த நடவடிக்கையும் உரிய கொள்கைகள் பின்புலமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய கொள்கைகள் மக்களின் தேவையை அதிகரிக்கும் விதமாகவும், அதற்கேற்ப பொருள் விநியோகம் இருக்கும்படியும் இருக்க வேண்டும்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் மட்டும் ஒருங்கிணைந்த சீர்திருத்தம் மூலம் மனித வள சந்தையானது கடந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜப்பானில் பணிகளில் பெண்கள் அதிகம் வந்துவிட்டதால் தனிநபர் ஜிடிபி 2030-ல் 4 சதவீத அளவுக்கு உயரும்” என்றார் கிறிஸ்டைன் லகார்டே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE