ஆழ்கடலில் விமானத்தை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்: கறுப்புப் பெட்டியைக் கண்டறிய 4500 அடி ஆழத்தில் சோனார் கருவி

தெற்கு இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் விழுந்ததாகக் கருதப்படும் மலேசிய விமானத்தை நீர்மூழ்கி வீரர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுதவிர சுமார் 4500 அடி ஆழத்தில் நீள்உருளை வடிவிலான சோனார் கருவி இறக்கப்பட்டு கறுப்புப் பெட்டி சிக்னலை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல் கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. சில நாள்களுக்கு முன்பு சீன போர்க்கப்பலில் ஒரு சிக்னல் பதிவானது. அது மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டி சிக்னலாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அதே பகுதியில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலிலும் சிக்னல் பதிவானது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அந்த சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பவ பகுதியில் நீர்மூழ்கி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆழ்கடலில் மூழ்கி விமானத்தைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே விமானத்தின் கறுப்புப் பெட்டி சிக்னலை கண்டறிய நீள்உருளை வடிவிலான சோனார் கருவி கடலுக்கு அடியில் 4500 ஆழத்தில் இறக்கப்பட்டுள்ளது. அந்தக் கருவியில் சிக்னல் கண்டறியப்பட்டால் சம்பவ பகுதியில் தேடுதல் பணி சுருக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

கறுப்புப் பெட்டி சிக்னல் கொடுக்குமா?

கறுப்புப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் 30 நாள்களுக்கு மட்டுமே செயல்படக் கூடியவை. விமானம் மாயமாகி நேற்றோடு 31 நாள்கள் நிறைவடைந்துவிட்டன.

இன்னும் சில வாரம் அல்லது சில நாள்களுக்கு பேட்டரி செயல்படும் அல்லது ஏற்கெனவே செயலிழந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நிச்சயமற்ற சூழ்நிலை யில் விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE