அமெரிக்கா: குடியரசுக் கட்சியினர் மீது அதிபர் ஒபாமா தாக்கு
புதிய பட்ஜெட் தொடர்பான விவகாரத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சியும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியும் தத்தமது நிலையில் பிடிவாதம் காட்டி வரும் நிலையில் நிர்வாக செலவுக்கு நிதியின்றி 8 லட்சம் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 2 வது நாளாகவும் நிர்வாகம் முடங்கியது. இந்த பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்பது புரியவில்லை. பொதுமக்களின் மருத்துவ நலன் சார்ந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை ஒபாமா கொண்டுவந்துள்ளார்.
ஒபாமாகேர் எனப்படும் இந்த கனவுத் திட்டத்தை முடக்கிடவே பட்ஜெட்டுக்கும் அரசு நிர்வாக செலவுக்கும் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மைமிக்க பிரதிநிதிகள் அவை ஒப்புதல் தரவில்லை என ஜனநாயக கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஏழைகளுக்கு உதவிடும் வகையில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட சட்டத்தை கொண்டுவந்து 2010ல் கையெழுத்திட்டார் ஒபாமா. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றமும் இதற்கு பச்சைக்கொடி காட்டியது. அது அக்டோபர் 1ல் அமலுக்கு வந்தது. மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அமலாக்கத்தை தாமதம் செய்தால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தருவதாக நிபந்தனை விதி்த்துள்ளது குடியரசுக் கட்சி. இதை ஒபாமா ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் செலவு செய்ய அனுமதி கிடைக்காததால் நிர்வாகம் முடங்கிவிட்டது. இதனால் பணிக்கு வரவேண்டாம் என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளதால் அவர்களுக்கு சம்பளமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்தகையதொரு நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் செயல்படாமல் தொடர்ந்து முடங்கினால் மோசமான விளைவுகள் ஏற்படும். பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும். பல நிறுவனங்கள் சிதையும் என்று செவ்வாய்க்கிழமை எச்சரித்தார் ஒபாமா. பட்ஜெட்டை நிறைவேற்ற ஒத்துழைத்து முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு பிரதிநிதிகள் அவைக்கு கோரிக்கை விடுத்தார். செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது நாடாளுமன்றத்தின் பொறுப்பு.
இது பற்றி அதனுடன் சமாதானம் பேச அவசியமில்லை என்றார் ஒபாமா செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் மத்திய அரசுப்பணியில் உள்ள 8 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பூங்காங்கள், அருங்காட்சியகங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே தமது அணுகு முறையில் எவ்வித மாற்றமு்ம இல்லை என குடியரசுக் கட்சியி னர் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதனால் புதிய பட்ஜெட் பிரதிநிதிகள் அவையில் நிறை வேறாது என்று தெரிகிறது.
இந்நிலையில் செலவு சார்ந்த 2 மசோதாக்களை குடியரசுக் கட்சி பெரும்பான்மை மிக்க பிரதிநிதிகள் அவை நிறைவேற்றியது. இதை ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை யாக உள்ள செனட் அவை நிராகரித்துள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான செலவு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தால் இவற்றுக்கு ஒப்புதல் தருகிறோம் என்று ஜனநாயகக் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.