கனவுகளின் மீதான தாக்குதல்

‘நீங்கள் என் முகத்தின் மீது திராவகத்தை வீசவில்லை; என் கனவுகளின் மீது வீசினீர் கள். உங்கள் இதயத்தில் அன்பில்லை; திராவகத்தால் அது நிறைந்திருக்கிறது. நேசத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாத உங்கள் கண்கள், சுட்டெரிக்கும் பார்வையால் என்னை எரியூட்டின. நான் இம்முகத்தைச் சுமந்தலையும் போது, என் அடையாளத்தின் ஒரு பகுதியாய் உங்களின் அரித்தழிக்கும் பெயர்களும் இணைந்திருப்பது எனக்குச் சோகமூட்டுகிறது. காலம் என்னை மீட்க வரவில்லை. பிரதி வியாழக்கிழமையும் உங்களை எனக்கு நினைவூட்டுகிறது”

சர்வதேச வீரப்பெண் விருது வழங்கும் விழாவில், இந்தியாவின் லட்சுமி வாசித்த கவிதை வரிகள் இவை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சர்வதேச வீரப் பெண் விருது ஆப்கானிஸ்தான், பிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் லட்சுமிக்கு, திராவகத் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிச்ச லாக ஈடுபட்டு வருவதற்காக இவ் விருது வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபரின் மனைவி மிஷெல் ஒபாமா இவ்விருதை வழங்கினார்.

2005-ம் ஆண்டு திராவக தாக்குதலுக்கு ஆளான லட்சுமி, முடங்கிப்போய்விடாமல் இத்தகு தாக்குதல்களுக்கு எதிரான சட்டப்பாதுகாப்பு கோரி போராடினார். பல்வேறு சட்டத் திருத்தங்களுக்குக் காரணமாகவும் விளங்கினார். இதைப் பாராட்டும் விதத்தில் சர்வதேச வீரப் பெண் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற பின் லட்சுமி கூறுகையில், “ இந்த விருதுக்குப் பிறகு, லட்சுமியால் முடியும்போது என்னாலும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும் என்பதை இந்தியப் பெண்கள் உணர வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு சர்வதேச வீரப் பெண் விருது, டெல்லியில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவுக்கு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE