அடைக்கலம் தேடுவோரின் அவலம்

By டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்று அரிஸோனா பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் நாக்கு வறண்டு இறந்து போயிருக்கிறாள் 6 வயது சிறுமி குர்மீத் கவுர்.

இந்த சம்பவம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. பஞ்சாபை சேர்ந்த இந்த சிறுமியின் தாய், தனது குழந்தைக்காக தண்ணீர் தேடி சென்றிருந்தபோது, இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது, 3 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியின் போட்ரும் கடற்கரையில் இறந்து கிடந்த சிரியாவை சேர்ந்த ஆலன் குர்தியை நினைவுபடுத்துகிறது. சொந்த நாட்டில் வாழ வழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு தேசம் நோக்கிப் போகும் அகதிகளின் பரிதாப நிலைக்கு உதாரணமாக, அந்த சிறுவனின் உயிரற்ற உடல், உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியது. இப்படி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா நோக்கிப் பயணிக்கும் அகதிகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் கொடுத்து உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமெரிக்காவில் சிறுமி குர்மீத் கவுரின் மரணம் தலைப்புச் செய்தி ஆகாது. எல்லையை தாண்டும்போது, உயிரிழந்த மேலும் ஒரு நபர் என்ற புள்ளி விவரம் மட்டும்தான் அது. இந்தியாவிலும் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படி ஆட்களை சட்டவிரோதமாக அழைத்துச் செல்லும் மோசடிக் கூட்டம் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. குர்மீத்தும் அவரது தாயும் மற்றும் பலரும் இந்தியாவில் இருந்து போலியான ஆவணங்களுடன் பல நாடுகளைக் கடந்து அமெரிக்கா நோக்கி சென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து விமானத்தில் சென்று பின்னர் சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் பயணம் செய்து லத்தீன் அமெரி்க்கா சென்றுள்ளனர். அங்கிருந்து மெக்ஸிகோ சென்று பாலைவனத்தைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவதுதான் அவர்களின் திட்டம். பலருக்கு இதில் வெற்றி கிடைப்பதில்லை. பசியாலும் தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டும் வழியிலேயே பலர் இறந்து விடுகின்றனர்.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவது கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து குறைந்து வருகிறது. இருந்தாலும் ஆண்டுதோறும் ஒரு கோடியில் இருந்து 1.20 கோடி பேர் வரை அமெரிக்காவுக்கு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முன்பெல்லாம் மெக்ஸிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. அதற்குப் பதிலாக மத்திய அமெரிக்காவில் இருந்தும் ஆசிய நாடுகளில் இருந்தும் அதிகம்பேர் அமெரி்க்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வருகின்றனர். கடந்த 2007-ல் ஆசியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக இருந்தது. இது 2017-ல் 15 லட்சமாக உயர்ந்துள்ளது. அதோடு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 4.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் விசா முடிந்த பிறகும் தங்கியிருக்கும் அமெரிக்காவில் படிப்பை முடித்த மாணவர்கள் அதிகம்.

கடந்த தேர்தலின்போது, குடியுரிமை சட்டங்கள் கடுமையாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து அதிபரானார் டொனால்டு ட்ரம்ப். கடந்த 2020-ல் மீண்டும் அதிபர் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் ட்ரம்ப், தனது நிலையில் உறுதியாக இருக்கிறார். `அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றும்விதமாக அடுத்த வாரம் முதல் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா நடவடிக்கை எடுக்கத் தொடங்கும். எவ்வளவு வேகமாக நுழைந்தார்களோ அதே வேகத்தி்ல் வெளியேற்றப்படுவார்கள்' என ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் விதமாக, தனது எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்ஸிகோ கூறியுள்ளது. அதோடு, மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளை ஏற்றுக் கொள்ளவும் மெக்ஸிகோ சம்மதித்துள்ளது. கவுதேமாலாவும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருப்பதால், மெக்ஸிகோ - அமெரிக்கா எல்லையில் பாலைவனப் பகுதியில் வெந்து கொண்டிருக்கும் குடியேறிகளுக்கு விமோசனமே கிடைக்கப் போவதில்லை. இந்தியாவில் இருந்து செல்லும் சட்ட விரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டால் அவர்களின் பிரச்சினை அவ்வளவு எளிதாக தீர்வதில்லை. அதற்குக் காரணம் கைது செய்யப்படும் இந்தியர்கள் தங்களை அரசியல் அகதிகள் எனக் கூறுகின்றனர். அமெரிக்க அதிகாரிகள் அதை ஏற்பதில்லை. மேலும் அங்குள்ள இந்திய தூதரகங்கள் இந்த விஷயத்தில் தலையிட முடியாத சூழல். அப்படி தலையிடுவதையும் இந்த `அரசியல் அகதிகள்' விரும்புவதில்லை. அதுதான் மிகப் பெரிய பிரச்சினை.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

57 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்