ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல்: பயம் காட்டினால் ஜெயிக்க முடியுமா...? - வாக்குச் சாவடிக்கு மக்களை வரவழைக்க நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டது அரசு

By எஸ்.ரவீந்திரன்

ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த முறை நடந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவு வெறும் 46 சதவீதம்தான். இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பும் சேர்ந்தால், வாக்குப்பதிவு இன்னும் குறைந்துவிடுமே என்ற அச்சத்தில், மக்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரும் வகையில் பிரச்சார வீடியோக்களை வெளியிட்டுள்ளது அரசு. நகைச்சுவை கலந்த இந்த வீடியோக்கள் ரஷ்யாவில் வைரலாக பரவி வருகின்றன.

மாஸ்கோ நகரம். மார்ச் 17-ம் தேதி. விடிந்தால் தேர்தல். இரவு நேரம். அடுக்குமாடி குடியிருப்பு. ஒரு நடுத்தர வயதுடைய ரஷ்ய தம்பதி தூங்கப் போவதற்கு ஆயத்தமாகிறது. “9 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறேன்..” என்கிறார் மனைவி. “நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. அலாரத்தை ஆப் பண்ணு. தூங்கணும்..” என்கிறார் கணவர். “நாளைக்கு முக்கியமான நாள். ஓட்டுப் போட போக வேண்டாமா..” என்கிறார் மனைவி. “இங்க பார்ரா... ஓட்டு போடப் போறாளாம்.. ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகுது.. நீ ஓட்டுப் போடலைனா தேர்தலே நடக்காது போல..” எனக் கேலியாகப் பேசியபடி படுக்கப் போகிறார் கணவர். சிறிது நேரத்தில் குறட்டை சத்தம் ஆரம்பித்து விடுகிறது.

காலிங் பெல் சத்தம் கேட்கிறது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறக்கிறார் கணவர். ராணுவ அதிகாரி வெளியே நிற்கிறார். அவருக்கு பின்னே கறுப்பினத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் நிற்கிறார்கள். “கட்டாய ராணுவப் பயிற்சிக்கு கிளம்புங்க..” என அழைக்கிறார் அந்த அதிகாரி. “எனக்கு 52 வயதாகி விட்டதே. நான் ஏன் வர வேண்டும்..” எனக் கேட்கிறார் கணவர். “அதெல்லாம் சட்டத்தை மாத்தியாச்சு.. கட்டாய ராணுவப் பணிக்கு வயது வரம்பை அறுபதா உயர்த்தியாச்சு..” என்கிறார் அதிகாரி.

“சரிங்க சார்..” என வடிவேல் பாணியில் கூறிவிட்டு, வீட்டுக்குள் திரும்பும் கணவரிடம், பள்ளியில் படிக்கும் மகன் அப்பா, “எனக்கு பீஸ் கட்டணும்.. ஒரு லட்சம் ரூபிள் வேணும்..” என்கிறான்.. “என்னது ஒரு லட்சம் ரூபிளா..” என அதிர்ச்சியோடு கேட்கிறார் அவர். நெஞ்சைப் பிடித்தபடி கிச்சனுக்குள் வருகிறார். கிச்சன் டேபிளில் தன்பாலின உறவாளர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். பாலீஷ் போட்ட தனது கை நகத்தை சரி செய்தபடி வாழைப்பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். திடுக்கிடும் கணவர், “யார்ரா இதுவ உள்ள விட்டது..” என மனைவியிடம் கேட்கிறார். “பார்ட்னர் கிடைக்காத தன்பாலின உறவாளர்களை ஒவ்வொரு குடும்பமும் தத்தெடுத்து வளர்க்கணும்னு அரசு உத்தரவு போட்டிருக்குதே.. தெரியாதா..” என்கிறார் மனைவி.

இந்த காட்சிகள் மாறி மாறி வர, மண்டையைப் பிய்த்தபடி ஓடுகிறார் கணவர். அப்போது அலாரம் அடிக்க விழிக்கிறார். போர்வையை மூடியபடி படுத்திருக்கும் மனைவியை எழுப்ப, போர்வையை விலக்குகிறார். அங்கே தன்பாலின உறவாளர் படுத்திருக்கிறார். தூக்கிவாரிப் போடுகிறது. அப்போது மீண்டும் உண்மையிலேயே அலாரம் அடிக்கிறது. தூக்கத்தில் இருந்து விழிக்கிறார் கணவர். அப்போதுதான் நடந்தது எல்லாம் கனவு எனத் தெரிய வருகிறது. மனைவியை எழுப்பி, “தூங்குனது போதும்.. எந்திரி.. ஓட்டுப் போடப் போகணும்.. ஓட்டுப் போடலைனா அவ்வளவுதான்..” என்கிறார் கணவர்.

மொத்தமே 3 நிமிடம் ஓடும் இந்த பிரச்சார வீடியோ ரஷ்ய இன்டர்நெட்டைக் கலக்கி வருகிறது. பல லட்சம் பேர் இதைப் பார்த்து ரசித்து, பகிர்ந்து வருகிறார்கள்.

இரண்டாவது வீடியோவில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு போகிறார். நேராக, மருத்துவமனைக்குத்தான் போவார் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது வாக்குச் சாவடியில் காரை நிறுத்திவிட்டு வாக்களிக்கச் செல்கிறார்.

அடுத்த வீடியோவில் ஒரு இளம் காதல் ஜோடி கொஞ்சிக் கொண்டிருக்கிறது. முத்த மழை பொழியும் காதலனிடம், “நீ சின்னப் பையனா.. பெரியாளா..” எனக் கேட்கிறாள் காதலி. “நான் பெரியாள்தான்..” என அவசர அவசரமாகக் கூறும் காதலனிடம், “நீ ஓட்டுப் போட்டியா..” எனக் கேட்க.. “இல்ல இன்னும் போடல..” என்கிறான் காதலன். “அப்பன்னா நீ இன்னும் வளரல.. சின்னப் பையன்தான்..” எனக் கூறி அவனை தள்ளி விடுகிறாள் காதலி.

இப்படி 3 வீடியோக்களையும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு தயாரித்துள்ளது ராஸ்வீடியோ என்ற நிறுவனம். காதலர் தினமான பிப்ரவரி 14-ல் யூடியூப்பில் இவை அப்லோடு செய்யப்பட்டன. இதுவரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது.

எல்லா நாடுகளிலும் இருப்பதுபோல், ரஷ்யாவிலும் இளைஞர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடி பக்கமே வருவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 46 சதவீதம் பேர்தான் வாக்களித்தனர். அதிலும் தலைநகரான மாஸ்கோவில் 35 சதவீத வாக்குகள்தான் பதிவானது. எப்படியும் அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின்தான் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிர வைக்கும் வெற்றி வேண்டும் என ஆளும் கட்சி நினைப்பதால்தான் இந்த வீடியோ பிரச்சாரம்.

தேர்தலை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. 41 வயதாகும் இவர் ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர். அதிபர் தேர்தலில் நிற்க விரும்பிய இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டைக் கூறி, நிற்க விடாமல் தடுத்துவிட்டது நீதிமன்றம்.

இவருடைய ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களும் மாணவர்களும்தான். கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக இவர் நடத்திய கூட்டங்களில் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல்ல நின்னாத்தான ஜெயிக்க முடியும்.. நிற்கலைனா.. என யோசித்த அரசு, பொய் வழக்கு போட்டு அலெக்ஸியை நிற்க விடாமல் செய்து விட்டது என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். முதலில் அரசியல் எதிரிகளை ஒழித்தார்கள். இப்போது, ஓட்டுப் போடாமல் இருந்தாலோ அல்லது மாற்றி ஓட்டுப் போட்டாலோ என்ன நடக்கும் தெரியுமா.. 60 வயசு வரைக்கும் கட்டாய ராணுவப் பணி... ராணுவத்துல எல்லா நாட்டவரும் வேலைக்கு வந்துருவாங்க.. கல்விக் கட்டணம் கன்னாபின்னானு உயர்ந்திடும்.. தன்பாலின உறவாளர்களோட கும்மி கொட்டணும்.. இப்படி பயம் காட்டி வெற்றி பெற நினைக்கிறார்கள் என விமர்சிக்கிறார்கள் இவர்கள்.

இதை மறுக்கிறது அரசு. “பயம் காட்டினால் ஜெயிக்க முடியுமா? எல்லோரும் ஓட்டுப் போடணும். எங்களுக்கு தோல்வி பயமில்லை. வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தால்தான், அது அதிபர் புதினின் உண்மையான செல்வாக்கை பிரதிபலிக்கும்..அதற்காகத்தான் இந்த பிரச்சாரம்” என்கிறார்கள் ஆளும் கட்சிக்காரர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

மேலும்